இன்று (செப்.24) காலை திரைப்பட இயக்குநர் மோகன் ஜி சென்னை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கடந்தமுறை ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்றபோது, திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலப்பதாக இயக்குநர் மோகன் ஜி பேட்டியளித்தது சர்ச்சையானது. இதனை அடுத்து இன்று காலை சென்னையில் உள்ள அவரது காசிமேடு இல்லத்தில் வைத்து சென்னை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் இயக்குநர் மோகன் ஜி. ஆனால் அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
இது தொடர்பாக தன் எக்ஸ் வலைதள கணக்கில் பதிவிட்டுள்ள பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன், `எந்த வழக்கின் கீழ் மோகன் ஜி கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் அவரது குடும்பத்தினருக்கு கூறப்படவில்லை. இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது.
அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை. திமுகவினுடைய ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர்கருத்து பேசுபவர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது’ என்றார்.
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் மோகன் ஜி.