கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு ரூ. 20 பசுமை வரி: திண்டுக்கல் ஆட்சியர்

கொடைக்கானலில் உள்ள 15 ஊராட்சிகளும் தத்தமது கிராமசபைக் கூட்டங்களில் 5 லிட்டருக்கும் குறைவான பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பசுமை வரி விதிக்க தீர்மானம் நிறைவேற்றின
கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு ரூ. 20 பசுமை வரி: திண்டுக்கல் ஆட்சியர்
PRINT-130
1 min read

கொடைக்கானலில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு ரூ. 20 வரி விதிக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கொடைக்கானல் பகுதியில் தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் அடைத்து விற்கப்படும் 5 லிட்டருக்கும் குறைவான பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு ரூ. 20 பசுமை வரி விதிக்கப்படும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 28-ல் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, கொடைக்கானலை பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்ற இந்த உத்தரவை பிறப்பிப்பதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை அமல்படுத்த காவல்துறை, வனத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து செயல்படும் எனவும், கொடைக்கானலில் செயல்படும் கடைகள், உணவகங்கள் போன்றவற்றில் இது தொடர்பாக அவ்வப்போது சோதனை மேற்கொள்ளப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பாட்டில்களுக்கான பசுமை வரி விதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவை பிறப்புக்கும் முன்பே, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 15 ஊராட்சிகளும் தத்தமது கிராமசபைக் கூட்டங்களில் 5 லிட்டருக்கும் குறைவான பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு ரூ. 20 பசுமை வரியை விதிக்க தீர்மானம் நிறைவேற்றின.

`சில வாரங்களுக்கு முன்பு வெளியான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒட்டியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எந்த சமரசமும் இல்லாமல், கண்டிப்பான முறையில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படும். இது தொடர்பாக முன் அறிவிப்பின்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்’ என்று தினத்தந்திக்கு பேட்டியளித்துள்ளார் கொடைக்கானல் நகராட்சி ஆணையர் சத்தியநாதன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in