
திமுகவினரை போராட அனுமதித்துவிட்டு வழக்கு மட்டும் பதிந்துவிட்டு, பாமகவினரை போராடவிடாமல் சிறை வைப்பதுதான் நீதியா எனப் பதிவிட்டுப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் இன்று (ஜன.8) பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,
`தமிழ்நாட்டில் அனுமதியின்றி போராட்டம் நடத்துவோர் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும், அவ்வாறு போராடிய திமுகவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
திமுக ஆதரவு பெற்றவரால் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் பேசிய பாமக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜி.கே. மணி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு பாமக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த போராட்டத்திற்கு எதிராக காவல்துறை சார்பில் கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறையை சுட்டிக்காட்டினார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விளக்கத்தை அளித்திருக்கிறார். போராட்டம் நடத்தியதற்காக பாமகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைப் போலவே திமுகவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என இந்த விவகாரத்தில் அரசும், காவல்துறையின் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன.
பாமக சார்பில் போராட்டம் நடத்துவதற்காக 4 நாட்களுக்கு முன் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் போராட்ட நாளுக்கு முதல் நாளில்தான் அனுமதி மறுக்கப்பட்டது. போராட்டம் நடைபெறவிருந்த வள்ளுவர் கோட்டத்தைச் சுற்றிலும் 500-க்கும் மேற்பட்ட காவலர்களை நிறுத்தி எவரும் அங்கு கூடாத வகையில் நெருக்கடி கொடுத்தது. அதையும் மீறி அங்கு கூடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி உள்ளிட்ட பாமகவினர் அனைவரும் சுமார் 10 மணி நேரம் அடிப்படை வசதிகள் கூட இல்லாத இடங்களில் சிறை வைக்கப்பட்டனர். ஆனால், திமுகவினர் அறிவிப்பு வெளியிட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக போராட்டம் நடத்தினர். அவர்களின் போராட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என்று காவல்துறை கூறுகிறது.
ஆனால், பாமகவின் போராட்டத்தை தடுத்து நிறுத்தியதைப் போல திமுகவின் போராட்டத்தைத் தடுக்க எந்த முயற்சியையும் காவல்துறை மேற்கொள்ளவில்லை. காவல்துறையினரின் செயல்களை கண்டிக்கும் வகையில் நேற்று நான் அறிக்கை வெளியிட்ட பிறகுதான் திமுகவினர் மீது வழக்குத் தொடரப்பட்டதாக ஒரு நாடகத்தை காவல்துறை அரங்கேற்றியது.
காவல்துறை நடுநிலையாக செயல்படுகிறது என்றால் அனுமதியில்லாமல் நடத்தப்பட்ட திமுக போராட்டத்தை அனுமதித்தது ஏன்? போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யாதது ஏன்? போன்ற வினாக்களுக்கு காவல்துறையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் திமுக அரசும், காவல்துறையும் நடத்தும் நாடகங்களை மக்கள் நம்ப மாட்டார்கள்’ என்றார்.