
திருநெல்வேலியில் ஆணவக்கொலை செய்யப்பட்ட ஐ.டி. ஊழியர் கவினை, காவல் ஆய்வாளர் காசி பாண்டியன் மிரட்டியதாக வெளியான செய்திக்கு நெல்லை மாநகர காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரான மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் கடந்த ஜூலை 27-ல் திருநெல்வேலி கே.டி.சி. நகரில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கவின் காதலித்த பெண்ணின் சகோதரன் சுர்ஜித், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சாரணடைந்த நிலையில், சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கொலை செய்யப்படுவதற்கு முன்பு கவின் செல்வகணேஷை அழைத்து பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் காசிப்பாண்டியன் மிரட்டியதாக அவரது தந்தை சந்திரசேகர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்து திருநெல்வேலி மாநகர காவல்துறை இன்று (ஆக. 1) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது,
`கடந்த ஜூலை 27 அன்று, திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை காவல் சரகம், கே.டி.சி. நகர், மங்கம்மாள் சாலை, அஷ்டலட்சுமி நகர் முதல் தெருவில் வைத்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ் (வயது 27) என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இது சம்பந்தமாக சமூக வலைதளங்களில் `ஆணவக்கொலை கட்டப் பஞ்சாயத்து? நெல்லையில் நிகழ்ந்த ஜாதி ஆணவ கொலையில் பஞ்சாயத்து செய்ததாக காவல் ஆய்வாளர் மீது புகார்; கை, கால்களை உடைத்துவிடுவேன் என கூறி மிரட்டிய ஒரே வாரத்தில் கொலை நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு’ என்ற செய்தி வெளியிடப்பட்டது.
கவின் செல்வகணேஷ் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக, அவரது காதல் விவகாரம் தொடர்பாக எந்த ஒரு புகாரும் திருநெல்வேலி மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் பெறப்படவில்லை. இது சம்மந்தமாக திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள காவல் ஆய்வாளர் எவரும் கொலையுண்ட கவின் செல்வகணேஷிடம் எந்த விதமான விசாரணையும் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனவே சமூக வலைதளங்களில் காவல் ஆய்வாளர் பற்றி வெளியிடப்பட்ட செய்திகள் அடிப்படை ஆதாரமின்றி உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.