
சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் தமிழிசை சௌந்தரராஜனிடம் அமித் ஷா காட்டமாகப் பேசிய காணொளி கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆந்திரப் பிரதேச முதல்வராக சந்திரபாபு நாயுடு இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்கள்.
விழா மேடையில் அமைந்திருந்த வெங்கையா நாயுடு, ஜெ.பி. நட்டா, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களை வணங்கி தமிழிசை சௌந்தரராஜன் வருகை தந்தார். அப்போது, கடந்து சென்ற தமிழிசையைத் திரும்ப அழைத்த அமித் ஷா, சற்று காட்டமாக எதையோ பேசினார். இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆளுநர் பதவிகளைத் துறந்து தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜனும் தோல்வியடைந்தார்.
தோல்விக்குப் பிறகு அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும், தான் மாநிலத் தலைவராக இருந்தபோது சமூக விரோதிகளைக் கட்சியில் சேர்த்ததில்லை போன்ற கருத்துகளை தமிழிசை வெளிப்படையாகவே ஊடகங்களிடம் பகிர்ந்தார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான இவருடைய கருத்துகள் அரசியலில் பேசுபொருளாகின.
இந்தச் சூழலில்தான் அமித் ஷா, தமிழிசையிடம் பேசும் காணொளி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. விரைவில் தமிழிசை தரப்பிலிருந்தோ அல்லது பாஜக தரப்பிலிருந்தோ இந்தக் காணொளி குறித்து விளக்கம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.