
மதுரை வேலம்மாள் மருத்துவமனை அருகில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி திறந்து வைத்தார்.
தமிழ்நாடு கிரிகெட் வாரியத்தின் ஆதரவுடன் வேலம்மாள் கல்வி குழுமம் சார்பில் மதுரையில் 11 ஏக்கரில் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டுள்ளது. வேலம்மாள் மருத்துவமனை வளாகத்திற்கு அருகில், மதுரை சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் ரூ. 325 கோடி செலவில் இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு அடுத்து, தமிழ்நாட்டின் 2-வது பெரிய மைதானமாகத் திகழ்கிறது. இதில், 20 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் இருக்கை வசதி, பயிற்சி ஆடுகளங்கள், ஓய்வறை., உடற்பயிற்சிக் கூடம் உட்பட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மழை பெய்தால் விரைவில் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மைதானத்தில் டிஎன்பிஎல், ஐபிஎல், ரஞ்சி கோப்பை போன்ற போட்டிகள் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இன்று மைதானத்தைத் திறந்து வைத்தார். பின்னர் மைதானத்தைப் பார்வையிட்ட அவர், பேட்டரி வாகனத்தில் உலா வந்தார். முன்னதாக மதுரை வந்த அவருக்கு விமான நிலையத்தில் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.