சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து: உச்ச நீதிமன்றம்

சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து: உச்ச நீதிமன்றம்

வேறு வழக்குகள் ஏதும் நிலுவையில் இல்லாதபட்சத்தில், பிணையில் விடுவிக்கவும் உத்தரவு.
Published on

சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் காவல் அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் பல்வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரைக் கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே 12-ல் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கு விசாரணையின்போது, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு என்று கருத்து தெரிவித்தது.

இதையடுத்து, சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 9 அன்று உத்தரவு பிறப்பித்தது. வேறு ஏதேனும் வழக்கு இல்லாதபட்சத்தில் சவுக்கு சங்கரை விடுதலை செய்யலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து அடுத்த மூன்று நாள்களில் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. தேனியில் கஞ்சா வைத்திருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆகஸ்ட் 12 அன்று சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, தனக்கு எதிரான அனைத்து 17 வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இதை விசாரித்தது. இதில் உத்தரவு பிறப்பித்துள்ள உச்ச நீதிமன்றம், சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்தது. மேலும், சவுக்கு சங்கர் மீது வேறு வழக்குகள் ஏதும் நிலுவையில் இல்லாதபட்சத்தில், இவரைப் பிணையில் விடுவிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

logo
Kizhakku News
kizhakkunews.in