திமுகவை அழிக்க நினைப்பவர்களுக்கு...: முதல்வர் ஸ்டாலின் வரிசையில் உதயநிதி

இருவருமே தமிழக வெற்றிக் கழகம் குறித்தோ விஜய் குறித்தோ கருத்து தெரிவிக்க வேண்டாம் என்பதைத் தொண்டர்களிடம் சூசமாகத் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.
திமுகவை அழிக்க நினைப்பவர்களுக்கு...: முதல்வர் ஸ்டாலின் வரிசையில் உதயநிதி
படம்: https://x.com/Udhaystalin
1 min read

திமுகவை அழிப்பேன் எனப் பலர் கிளம்பியிருப்பதாகவும் இவர்களுக்கு நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

"திமுகவை அழிப்பேன் எனப் பலர் கிளம்பியிருக்கிறார்கள். அதற்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டு மக்கள் அதற்குச் சரியான பதிலடியைக் கொடுப்பார்கள்.

திமுக தொண்டர்கள் உணர்ச்சிவசமாக சந்தோஷமாக உற்சாகமாக இருக்கிறார்கள். இந்த உற்சாகம்தான் எதிரிகளுக்கு எரிச்சலைத் தருகிறது. அதிமுக பல்வேறு அணிகளாகப் பிரிந்திருக்கிறது. தனித்தனியாக இருக்கும் அதிமுகவும் யாரும் சேர்க்காத பாஜகவும் திமுக கூட்டணியில் எப்படியாவது ஒரு விரிசல் ஏற்பட்டுவிடாதா எனத் துண்டுபோட்டு காத்திருக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலின் தலைமையிலான நம் கூட்டணி வலுவாக இருப்பதாக நம் தலைவரும் சொல்லியிருக்கிறார். நம் கூட்டணிக் கட்சித் தலைவரும் இதில் மிகத் தெளிவாக இருக்கிறார். ஆகவே, நாம் நம் பணிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இன்னும் ஒன்றரை வருடங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை நோக்கி நாம் அனைவரும் ஒன்றாக உழைக்க வேண்டும்.

2026-ல் திமுக மீண்டும் வெற்றி பெறும். மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வர் ஆவார்" என்றார் உதயநிதி ஸ்டாலின்.

புதிதாகக் கட்சி தொடங்குபவர்கள் திமுக அழிய வேண்டும், ஒழிய வேண்டும் என நினைப்பதாகவும் திமுக வளர்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 4 அன்று பேசியிருந்தார். அண்ணா கூறுவதைப் போல 'வாழ்க வசவாளர்கள்' என்று மட்டுமே தன்னால் கூற முடியும் என்ற முதல்வர், தேவையில்லாமல் எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

கடந்த பிப்ரவரியில் புதிதாகக் கட்சி தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர், விழுப்புரத்தில் நடைபெற்ற முதல் மாநில மாநாட்டில் திமுக ஆட்சியை விமர்சித்து கருத்துகளை முன்வைத்திருந்தார். அரசியல் எதிரியாக திமுகவைக் குறிப்பிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாகவே விஜயின் பெயரைக் குறிப்பிடாமல் முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக சாடியதாக ஊடகங்களில் பேசப்பட்டன. முதல்வர் ஸ்டாலின் வரிசையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் தற்போது விஜயின் பெயரைக் குறிப்பிடாமல் திமுகவை அழிப்பேன் எனப் பலர் கிளம்பியிருப்பதாகப் பேசியுள்ளார்.

இருவருமே தமிழக வெற்றிக் கழகம் குறித்தோ விஜய் குறித்தோ கருத்து தெரிவிக்க வேண்டாம் என்பதைத் தொண்டர்களிடம் சூசமாகத் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in