
விஜய் குறித்த கேள்விக்கு சினிமா செய்திகளைப் பார்ப்பதில்லை என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நூலை வெளியிட்டார். இந்த விழாவில் அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே, ஓய்வுபெற்ற நிதிபதி கே. சந்துரு உள்ளிட்டோரும் கலந்துகொண்டார்கள்.
விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் சார்பில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். தமிழ்நாட்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும், பிறப்பால் ஒரு முதல்வர் உருவாக்கப்படக் கூடாது என்ற வகையில் திமுக மற்றும் திமுக கூட்டணிக்கு எதிராகப் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.
விஜய் பேசுகையில், திமுக கூட்டணிக் கட்சிகள் அழுத்தம் காரணமாக திருமாவளவனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என்றும் இருந்தாலும் அவருடைய மனசாட்சி இன்று நம்முடன் தான் இருக்கும் என்றும் கூறினார். இருவருடையப் பேச்சும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
நிகழ்ச்சியின் எதிரொலியாக ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியில் முன்னணி தோழர்களோடு கலந்துபேசி முடிவெடுக்கப்படும் என திருமாவளவன் விளக்கமளித்தார்.
இந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள். விஜய் குறித்த கேள்விக்கு சினிமா செய்திகளைப் பார்ப்பதில்லை என்று உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா கருத்து குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில், "யாருங்க இங்க பிறப்பால் முதல்வர் ஆனது? மக்கள் தேர்ந்தெடுத்து முதல்வர் ஆனார். அந்த அறிவுகூட இல்லை" என்றார்.