உயர் நீதிமன்ற உத்தரவுப்படியே ஆக்கிரமிப்பாளர்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருவதாக அனகாபுத்தூர் பிரச்னை குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரைப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அனகாபுத்தூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் துணை நின்றார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் அனகாபுத்தூர் விவகாரம் தொடர்பாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"அடையாறு நதியைச் சீரமைக்க தமிழ்நாடு அரசின் புதிய நிறுவனமான சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனம் (CRTCL) மூலம் ரூ. 1,500 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ள வரவு செலவு திட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த நடப்பு ஆண்டில் தமிழக அரசு ரூ. 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள காயிதே மில்லத் நகர், தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், எம்ஜிஆர் நகர் 3-வது தெரு ஆகிய இடங்களில் வசித்து வரும் 593 குடும்பங்களுக்குத் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் மூலம் தைலாவரம், கீரப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் நாவலூர் ஆகிய இடங்களில் 390 சதுர அடியில் இலவசமாக வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்படவுள்ளன. (ஒரு வீடு 17 லட்சம்: 390 சதுர அடி)
மேலும், அடையாறு ஆற்றங்கரையில் உள்ள ஜோதி ராமலிங்கம் நகர், திடீர் நகர், ஜோதி அம்மாள் நகர், சூர்யா நகர், மல்லிகைப்பூ நகர் ஆகிய 5 இடங்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு 390 சதுர அடி பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் சுமார் ரூ. 17 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டப்பட்டு இலவசமாக வழங்கப்படவுள்ளன.
மேலும், பயனாளிகளுக்கு குடும்பம் ஒன்றுக்கு இடமாற்றுப்படியாக ஒருமுறை ரூ. 5000, வாழ்வாதார உதவிக்காக மாதம் ரூ. 2,500 என்ற அடிப்படையில் வருடத்துக்கு ரூ. 30,000, மின்சாரம் இணைப்பு கட்டணம் ரூ. 2,500 என்ற அடிப்படையிலும் ஒவ்வொரு குடியமர்வுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஆற்றங்கரையில் வசித்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். மறு குடியமர்வுக்கு ஒப்புதல் தராத ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நதிநீர் சீரமைப்புத் திட்டம் என்பதாலும் மழைக்கால வெள்ளத்தடுப்பு காரணங்களுக்காக ஆற்றங்கரையில் வசிக்கும் ஆக்கிரமிப்பாளர்களை அரசு உரிய உதவிகளுடன் மறு குடியமர்வு செய்து வரும் அரசின் இந்தச் செயலுக்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்றார்.