பிஆர்எஸ் தலைவர் கவிதாவுக்குப் பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு

கவிதாவின் நீதிமன்றக் காவல் நாளை நிறைவடைகிறது.
கவிதா (கோப்புப்படம்)
கவிதா (கோப்புப்படம்)
1 min read

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள பிஆர்எஸ் சட்டமேலவை உறுப்பினர் கவிதாவின் இடைக்காலப் பிணை மனுவைத் தில்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தில்லி மதுபானக் கொள்கை பணமோசடி வழக்கில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைவரும், தெலங்கானா சட்டமேலவை உறுப்பினருமான கவிதா மார்ச் 15-ல் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.

தில்லி அழைத்து வரப்பட்ட இவர் மார்ச் 16-ல் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மார்ச் 23 வரை கவிதாவைக் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மார்ச் 23-ல் அமலாக்கத் துறையின் காவல் மேலும் 3 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இதன்பிறகு, மார்ச் 26-ல் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் கவிதா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கவிதாவை ஏப்ரல் 9 வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, தனது மகனுக்கு ஆண்டுத் தேர்வு நடைபெறவுள்ளதால், இடைக்காலப் பிணை கோரி கவிதா தரப்பில் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் விரிவான மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு அமலாக்கத் துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கவிதா தனது ஃபோனில் உள்ள ஆதாரங்களை அழித்துள்ளார். சாட்சியங்கள் தங்களுடைய வாக்குமூலங்களைத் திரும்பப் பெற நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள்" என்றார்.

இதையடுத்து, கவிதாவுக்குப் பிணை வழங்க மறுப்பு தெரிவித்த தில்லி சிறப்பு நீதிமன்றம் இடைக்காலப் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்தது.

logo
Kizhakku News
kizhakkunews.in