
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற்றம்பெற்றுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதற்கு அருகே பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் கடந்த ஓரிரு நாட்களாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவியது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக இன்று (டிச.10) வலுப்பெற்றுள்ளது.
இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (டிச.11) தென் மேற்கு வங்கக்கடல் பகுதி, அதாவது இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி நிலவும். இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மிகவும் குறிப்பாக தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும், கடலூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (டிச.11) டெல்டா மாவட்டங்களிலும், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் 12, 13-ம் தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.