தமிழ்நாட்டில் ரூ. 44,125 கோடி மதிப்புடைய முதலீடுகளுக்காக 15 முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் டிஆர்பி ராஜா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். அப்போது அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்தார்.
"அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ஏறத்தாழ ரூ. 44,125 கோடி முதலீட்டுக்காக 15 முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 24,700 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
வாகன உற்பத்தி, மின்னனு பொருள்கள், உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பேட்டரி உற்பத்தி தொழில்கள் தொடர்புடைய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதன்முறையாக சிப்காட் சார்பில் ரூ. 706.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 18,720 படுக்கைகள் கொண்ட தொழிற்சாலைப் பணியாளர்கள் தங்குவதற்கான கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் வரும் 17 அன்று திறந்து வைக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்துக்காக இது கட்டப்பட்டுள்ளது" என்றார் தங்கம் தென்னரசு.
மேலும், எரிசக்தித் துறை மூலம் மூன்று முக்கியமான கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
"தமிழ்நாடு நீரேற்று புனல் மின் திட்டம்.
தமிழ்நாடு சிறுபுனல் மின் திட்டங்கள்.
தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களைப் புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு
பசுமை எரிசக்தியில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கக்கூடிய மாநிலம். 2030-க்குள் 20 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி நிறுவுதிறன் இலக்கை அடைய வேண்டும் என முதல்வர் நிறுவியிருக்கிறார். இதற்காக இந்த மூன்று கொள்கைத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது" என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.