தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி முடிவு: தலையிட உயர் நீதிமன்றம் மறுப்பு | Sanitation Workers

ஒப்பந்த நிறுவனத்துடன் சென்னை மாநகராட்சி நிர்வாகம் கலந்து பேசி தூய்மைப் பணியாளர்கள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தை வழங்க வழிவகை செய்யவேண்டும்.
சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்ANI
1 min read

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட 2 மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் மாநகராட்சி நிர்வாகத்தின் முடிவில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் கடந்த ஆக. 1 முதல் குப்பைகளை கையாளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மண்டலங்களில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் ஏற்கனவே பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்களின் மாத ஊதியம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையொட்டி தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு பந்தல் அமைத்து கடந்த ஆகஸ்ட் 1 தொடங்கி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

எனினும், போராட்டம் நடத்தியவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு பொது நல வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஆகஸ்ட் 13 அன்று அவர்கள் அனைவரையும் காவல்துறை அப்புறப்படுத்தியது.

இதற்கிடையே இரண்டு மண்டலங்களின் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதன் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `மாநகராட்சி நடவடிக்கையால் 2,000 தூய்மைப் பணியாளர்களின் வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது, 15 ஆண்டுகள் பணியாற்றியவர்களை குப்பைகளைப் போல தூக்கி எறியக்கூடாது’ என்றார்.

மேலும், `தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரிய வழக்கு, தொழில் தகராறு தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளதால் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்க முடியாது’ என வாதங்களை முன்வைத்தார்.

இதைத் தொடர்ந்து மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `தூய்மை பணியாளர்கள் பணியில் இருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள், ஒப்பந்ததாரர்கள் மூலம் பணி வழங்கப்படும். சென்னை மாநகராட்சியில் உள்ள் 15 மண்டலங்களில் 11 மண்டலங்களில் தூய்மை பணி ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டன.

தற்போது இந்த இரு மண்டலங்களிலும் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அதிக ஊதியத்துடன், வருங்கால வைப்பு நிதி, காப்பீடு உள்ளிட்ட சலுகைகளுடன் வேலை வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சுரேந்தர், `சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது’ என்றார்.

அதேநேரம், ஒப்பந்த நிறுவனத்துடன் சென்னை மாநகராட்சி நிர்வாகம் கலந்து பேசி தூய்மைப் பணியாளர்கள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தை வழங்க வழிவகை செய்யவேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டு, நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in