
பாமக இளைஞரணித் தலைவர் நியமனத்தை முன்வைத்து, அக்கட்சிப் பொதுக்குழுவில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில் தனி அலுவலகம் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார் அன்புமணி.
புதுச்சேரியில் இன்று (டிச.28) பாமக பொதுக்குழு நடைபெற்றது. இதில் ராமதாஸ், அன்புமணி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற வாக்குவாதம் பின்வருமாறு,
ராமதாஸ்: ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன். கட்சித் தலைவர் அன்புமணிக்கு 50 தொகுதிகளில் வெற்றியைப் பெற்றுத்தர, ஒரு நல்ல இளைஞரான பரசுராமன் முகுந்தனை மாநில இளைஞரணித் தலைவராக அறிவிக்கிறேன். இன்றில் இருந்து அவர் பொறுப்பை ஏற்று, அன்புமணிக்கு அனைத்து வகையிலும் உதவியாக இருப்பார்.
அன்புமணி ராமதாஸ்: அவன் (முகுந்தன்) கட்சியில் இணைந்து 4 மாதங்கள்தான் ஆகிறது. அவனுக்கு இளைஞரணித் தலைவர் பதவியைக் கொடுத்தால் எப்படி? என்ன அனுபவம் உள்ளது அவனுக்கு? நல்ல அனுபவசாலியான நபரை பதவிக்குக் கொண்டு வாருங்கள். களத்தில் திறமையான ஆட்கள் வேண்டும். கட்சியில் இணைந்தவுடன் பொறுப்பு கொடுத்தால் எப்படி?
ராமதாஸ்: யாராக இருந்தாலும் நான் சொல்வதைக் கேட்கவேண்டும். இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதைக் கேட்காதவர்கள் யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது. மீண்டும் கூறுகிறேன், மாநில இளைஞரணித் தலைவராக முகுந்தனை நியமிக்கிறேன்.
அன்புமணி ராமதாஸ்: குடும்பத்தில் இன்னொருவரா.. சென்னை பனையூரில் மூன்றாவது தெருவில் புதிய அலுவலகம் ஒன்றைத் திறந்திருக்கிறேன். அங்கு வந்து எப்போது வேண்டுமானாலும் என்னைச் சந்திக்கலாம்.
ராமதாஸ்: மீண்டும் கூறுகிறேன். உங்களின் மாநில இளைஞரணித் தலைவர் முகுந்தன். பரசுராமன் முகுந்தன். இன்னொரு அலுவலகத்தை திறந்துகொள், முகுந்தன் உனக்கு உதவியாக இருப்பார். இதை யாரும் மாற்ற முடியாது. உனக்கு விருப்பம் இல்லை என்றால், வேறு என்ன சொல்வது? விருப்பமில்லாதவர்கள் யாராக இருந்தாலும் கட்சியில் இருந்து விலகிக்கொள்ளலாம்.
இந்நிலையில், புதிய அலுவகலகத்தின் முகவரியை அன்புமணி அறிவித்துள்ளதால், பாமகவில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பாமக இளைஞரணித் தலைவர் பதவியில் இருந்து, பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணியின் மகன் தமிழ்குமரன் சமீபத்தில் விலகினார். ராமதாஸின் மகள் வழிப் பேரனாவார் பரசுராமன் முகுந்தன்.