வரதட்சணை கொடுமையால் உயிரிழப்பா?: சென்னை இளம்பெண் மர்ம மரணத்தை சுற்றும் சர்ச்சை!

தற்போது வேறொரு பெண்ணுடன் நாக அர்ஜுனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.
வரதட்சணை கொடுமையால் உயிரிழப்பா?: சென்னை இளம்பெண் மர்ம மரணத்தை சுற்றும் சர்ச்சை!
1 min read

வரதட்சணை கொடுமையால் திருப்பூரைச் சேர்ந்த ரிதன்யா, திருவள்ளூரைச் சேர்ந்த லோகேஸ்வரி ஆகியோர் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், வரதட்சணை கொடுமையால் சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், மத்திய பிரதேசத்தில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கவிதாவுக்கும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் நாக அர்ஜுனுக்கும் கடந்த மார்ச் 7-ல் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தின்போது கவிதா குடும்பத்தினரால், 100 சவரன் தங்க நகை, வெள்ளிப் பொருட்கள், ரூ. 37 லட்சம் மதிப்புள்ள கார், லேப்டாப், வீட்டு உபயோகப் பொருள்கள் போன்றவை வரதட்சணையாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்திய ராணுவத்தில் மருத்துவராகப் பணிபுரியும் நாக அர்ஜுன், திருமணத்திற்குப் பிறகு மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் மனைவி கவிதாவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜூன் 10-ம் தேதி நள்ளிரவில் கவிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்குப் போராடி வருவதாக நாக அர்ஜுனின் தந்தை, கவிதாவின் பெற்றோருக்குத் தகவலளித்துள்ளார்.

இதற்கிடையே ஜபல்பூர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக கவிதா அனுமதிக்கப்பட்டதாகவும், அப்போது ஏற்கனவே அவர் உயிரிழந்தது தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், கவிதா பெற்றோரிடம் தகவல் தெரிவிக்காமல் அவரது உடல் சென்னைக்குக் கொண்டு செல்ல நாக அர்ஜுன் குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

திண்டுக்கல்லில் உள்ள நாக அர்ஜுன் வீட்டிற்குக் கவிதாவின் உடலைக் கொண்டு செல்லாமல், கவிதா பெற்றோரிடம் உடலை ஒப்படைத்ததால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், கவிதாவின் உடலுக்கு இறுதி சடங்குகள் நிறைவடைந்த பிறகு, நாக அர்ஜுன் குடும்பத்தினரின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் தென்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, எந்தவிதமாக கவலையும் இல்லாமல் நாக அர்ஜுன் குடும்பத்தினர் சகஜமாக இருந்ததாக கவிதா குடும்பத்தினரால் குற்றம்சாட்டப்படுகிறது. தற்போது வேறொரு பெண்ணுடன் நாக அர்ஜுனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இதற்கிடையே, ஜபல்பூரிலும், சென்னை கோயம்பேடு காவல் துணை ஆணையரிடமும் கவிதாவின் தந்தை தட்சிணாமூர்த்தி இந்த விவகாரம் தொடர்பாக புகாரளித்துள்ளார். கவிதாவின் மரணத்திற்கு வரதட்சணை கொடுமை காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in