செய்தியாளர்களை விஜய் சந்திப்பாரா?: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால் | TVK Vijay | D. Jayakumar |

ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தருகிறோம் என்று விஜய் சொன்னாரே, யாராவது போனார்களா?...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் (கோப்புப்படம்)
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் (கோப்புப்படம்)ANI
1 min read

விஜய் முதலில் செய்தியாளர்களைச் சந்திக்கத் தயாராக வேண்டும். எழுதி வைத்ததை வாசிக்கக் கூடாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், திமுக மட்டுமின்றி அதிமுகவையும் விமர்சித்தார். அதிமுகவும் திமுகவும் சேர்ந்து தான் தனக்கு எதிராகச் சதி செய்வதாகக் குற்றம்சாட்டினார்.

திமுக - காங்கிரஸ் விவகாரம் வெளிச்சத்திற்கு வரும்

இதற்கிடையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது விஜய் பேச்சு குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது: “நெருப்பில்லாமல் புகையாது. கத்திரிக்காய் மலிந்தால் கடைத்தெருவுக்கு வரும். விரைவில் திமுக - காங்கிரஸ் கூட்டணி என்ன என்பது வெளிச்சத்திற்கு வரும். தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் அதிமுகவுக்கு மாபெரும் வெற்றி கிடைத்து, ஜெயலலிதாவின் ஆட்சி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும்.

விஜய் செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும்

எழுதி வைத்து மனப்பாடம் செய்து பேசுவது மிகவும் சுலபம். அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். விஜய் ஏற்கெனவே கைத்தேர்ந்த நடிகர். அவருக்குச் சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை. உடல் அசைவுகளுடன் சிறப்பாக அதை அவர் வெளிப்படுத்திவிட முடியும். செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும். அதற்குத் தயாராக இருக்க வேண்டும். செய்தியாளர்களை அப்படிச் சந்தித்துப் பேசுவதற்கு தில், திராணி எல்லாம் வேண்டும். அது இல்லாமல் ஏதோ இவருக்குத்தான் தில் இருப்பது போல், எழுதிக் கொடுத்ததை வைத்துக்கொண்டு, ஆதவ் அர்ஜுனாவும் அருணும் இயக்குநர்களாக இருக்க, வசனத்தை நடிகராகப் படிக்கிறார் விஜய்.

யாராவது விஜய் கூட்டணிக்குப் போனார்களா?

தொடக்கத்தில் விஜய் என்ன சொன்னார்? ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தருகிறோம் என்றார். யாராவது போனார்களா? அதன் விளைவு, ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனுஷனைக் கடித்தது என்பது போல் இப்போது அதிமுக பக்கம் திரும்பியிருக்கிறார்” என்றார்.

Summary

Former Minister Jayakumar has said that Vijay should first prepare to meet the press and should not read what is written.

logo
Kizhakku News
kizhakkunews.in