
கடலூர் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை விபத்து நடைபெற்ற ரயில்வே லெவல் கிராஸிங் கேட்டில், சுரங்கப்பாதை அமைக்க ஓராண்டிற்கும் மேலாக மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே லெவல் கிராஸிங் கேட்டை இன்று காலை 7.45 மணி அளவில் கடக்க முயன்ற தனியார் பள்ளி வாகனம் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணியர் ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். ஒரு மாணவரும், வாகன ஓட்டுனரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,
`(பள்ளி) வாகனம் வந்தபோது ரயில்வே லெவல் கிராஸிங் மூடியிருந்தது, பள்ளிக்கு செல்ல தாமதாகும் என்று வாகன ஓட்டுநர் கேட்டுக்கொண்டதன்பேரில் விதிகளை மீறி லெவர் கிராஸிங்கை கடக்க கேட் கீப்பர் அனுமதித்து முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விதிகளின்படி (ரயில்வே) கேட்டை கேட் கீப்பர் திறந்திருக்கக்கூடாது. கேட் கீப்பர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவரை பணி நீக்கம் செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கிவிட்டன, அலட்சியத்திற்காக அவர் மீது வழக்குப் பதியப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த லெவல் கிராஸிங் கேட்டில், ரயில்வே நிதியில் சுரங்கப்பாதை அளிக்க தெற்கு ரயில்வே ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டது. ஆனால் ஒரு வருடத்திற்கும் மேலாக மாவட்ட ஆட்சியர் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. இந்த எதிர்பாராத நிகழ்வுக்காக தெற்கு ரயில்வே மன்னிப்பு கோருகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.