ஃபெஞ்சல் பாதிப்பு: தண்ணீருடன் கண்ணீரில் மிதக்கும் கடலூர்!
https://x.com/DDNewslive

ஃபெஞ்சல் பாதிப்பு: தண்ணீருடன் கண்ணீரில் மிதக்கும் கடலூர்!

கடலூரைப் பொருத்தவரை இதுவரை 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
Published on

கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல் கடலூருக்கு அருகே நிலை கொண்டுள்ளதால், அம்மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் நேற்று (நவ.30) இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. ஆனால் கரையைக் கடந்த புயல் வலுவிழக்காமல், பல மணிநேரமாக கடலூருக்கு வடக்கே 30 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னமும் கனமழை பெய்துவருகிறது.

கடலூர் நகரத்தில் இருந்து திருவந்திபுரம் வழியாக பண்ருட்டி செல்லும் பிரதான சாலையில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக கடலூர் நகரத்தின் திருபாதிரிபூலியூர் ரயில் நிலையத்திற்கு அருகே கே.என். பேட்டை என்ற பகுதி வெள்ள நீரால் முழுமையாக சூழப்பட்டுள்ளது.

இந்த கே.என். பேட்டை பகுதியில் பெரும்பாலும் குடிசை வீடுகள் உள்ளன. இந்த குடிசை பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்த காரணத்தால், இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். மேலும், வெள்ள நீரில் செல்லும் இரு சக்கர வாகனங்கள் ஆங்காங்கே பழுதடைந்து நின்றுவிடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கடலூரைப் பொருத்தவரை இதுவரை 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. புயல் கடலூருக்கு அருகே நிலை கொண்டுள்ள காரணத்தால், பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து கீழே விழுந்துள்ளன. அவற்றை அகற்றும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூரின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரே உள்ள தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தரைப்பாலம் மூழ்கியது. அத்துடன் அதற்கு அருகில் உள்ள உச்சிமேடு பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் பேரிடர் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாமல், வெள்ள நீரும் சூழ்துள்ளதால் கடலூர் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், அரசு சார்பில் புயல் பாதிப்பை எதிர்கொள்ள சரிவர நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என ஊடகங்களில் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

logo
Kizhakku News
kizhakkunews.in