விஜயின் கடைசிப் படம் அமைதியாக வெளியாக வேண்டும்: சி.டி.ஆர். நிர்மல் குமார் | TVK | C.T.R. Nirmal Kumar |

தேவை ஏற்பட்டால் தில்லியில் மீண்டும் ஆஜராகி விஜய் விளக்கமளிப்பார்...
சி.டி.ஆர். நிர்மல் குமார் (கோப்புப்படம்)
சி.டி.ஆர். நிர்மல் குமார் (கோப்புப்படம்)
2 min read

தவெக தலைவர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன், அமைதியாக வெளியாவதையே நாங்கள் விரும்புகிறோம் என்று அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதன் விசாரணைக்காக தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேற்று (ஜன. 12) தவெக தலைவர் விஜய் ஆஜரானார். அவரிடம் பல்வேறு கேள்விகளை அதிகாரிகள் கேட்டதாகச் செய்திகள் வெளியாகின.

சென்னை திரும்பிய விஜய்

நேற்று மாலை 7 மணி வரை சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதன்பின் நட்சத்திர விடுதியில் தங்கிய விஜய் இன்று காலை தில்லியில் இருந்து புறப்பட்டு சென்னை திரும்பினார். சென்னை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் அவரை தவெக நிர்வாகிகள் வரவேற்றனர். அதன்பிறகு தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தில்லியில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி, அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு விஜய் விளக்கமளித்தார். மேலும் அடுத்தகட்ட விசாரணை அடுத்த வாரத்தில் ஒருநாள் வைத்துக் கொள்ளும்படி கேட்டிருக்கிறோம். அதற்கும் தேவைப்பட்டால் மீண்டும் விஜய் ஆஜராவார். தேர்தல் நெருங்குவதாலும் படம் வெளியீடு உள்ளிட நிகழ்ச்சிகள் இருப்பதாலும் அடுத்த வாரம் ஆஜராகி எங்கள் விளக்கங்களை சிபிஐயிடம் முழுமையாகத் தரவிருக்கிறோம்.

கரூர் சம்பவத்தில் முரண்பாடு

கரூர் சம்பவத்தைப் பொறுத்தளவில் என்ன நடந்தது என்று மக்கள் அனைவருக்கும் தெரியும். சம்பவத்தன்று 607 காவலர்கள் பணியமர்த்தப்பட்டதாக சட்டசபையில் முதலமைச்சர் கூறியிருந்தார். ஆனால் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் 500 காவலர்கள் இருந்ததாகச் சொன்னார். இந்த முரண்பாடே சிறந்த உதாரணமாக இருக்கிறது. தமிழ்நாடு அரசு அவசரப்பட்டு இந்த வழக்கில் பல தவறுகளைச் செய்திருக்கிறார்கள். அது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் எங்களால் முடிந்த வரை சிபிஐயிடம் கொடுத்திருக்கிறோம்.

உடற்கூராய்வில் குளறுபடி

அதேபோல் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு நடத்தப்பட்ட உடற்கூராய்விலும் குளறுபடி நடந்திருப்பது பற்றி பல புகார்களைத் தெரிவித்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைக் காவல்துறையினர் மிரட்டி, முன் தேதியிட்டுக் கையெழுத்து பெற்றதாகவும் புகார் கொடுத்திருக்கிறோம். கரூர் விவகாரத்தில் நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

படம் அமைதியாக வெளியாக வேண்டும்

ஜனநாயகன் விஜய்க்குக் கடைசி படம். இது தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியா முழுவதிலும் அமைதியான முறையில் வெளியாகி, மக்கள் அமைதியான முறையில் கண்டு களித்து, விஜய்க்கு அன்பை வழங்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஜனநாயகனுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

Summary

TVK Joint General Secretary CTR Nirmal Kumar said We want the release of Vijay's last film, Jana Nayagan, to be peaceful

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in