

திமுக ஊடகங்கள் திட்டமிட்டு விஜய்க்கு எதிரான பொய் செய்திகளைப் பரப்புவது வருந்தத்தக்கது என்று தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்தார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதன் விசாரணைக்காக தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கடந்த ஜனவரி 12 அன்று தவெக தலைவர் விஜய் ஆஜரானார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தில்லியில் உள்ள அலுவலகத்தில் விஜய் ஆஜரானார்.
சிபிஐ அதிகாரிகளின் கேள்விகள்
அப்போது விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் அடுக்கடுக்காக பல கேள்விகளைக் கேட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கூட்ட நெரிசல் ஏற்பட்ட பிறகும் தொடர்ந்து பிரசாரம் செய்தது ஏன்? எப்போது பேச்சை முடித்தீர்கள்? எப்போது அங்கிருந்து புறப்பட்டுச் சென்றீர்கள்? அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான கூட்டம் வந்தது எப்படி? அளவுக்கு அதிகமாக கூட்டம் வந்ததை நிர்வாகிகள் கவனிக்கவில்லையா? தண்ணீர் பாட்டிலை வீசியபோது கூட்ட நெரிசலை நீங்கள் பார்க்கவில்லையா? வாகனத்தில் ஏறி நின்றபோது கீழே நடந்தது தெரியவில்லையா? கண் எதிரே ஏற்பட்ட கூட்ட நெரிசலை நீங்கள் பார்க்கவில்லையா? அவ்வளவு நெரிசலிலும் வாகனத்தை முன்னே செலுத்தியது ஏன் என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
விஜயிடம் விசாரணை நிறைவு
இதற்கிடையில், விஜயிடம் விசாரணை நிறைவடைந்தது. அதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “விஜயிடம் இரண்டாவது நாளாக விசாரிக்கச் சம்மன் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் அவர் ஆஜராகி அதிகாரிகளின் கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை அளித்துள்ளார். எங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட வரை இன்றுடன் விஜயிடம் விசாரணை நிறைவடைந்தது. இனி அவருக்கு எந்த சம்மனும் அனுப்பப்படாது என்று கூறியுள்ளார்கள்.
திமுக சார்பு ஊடகங்களின் வதந்தி
காலையிலிருந்து திமுக சார்பு ஊடகங்கள், குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது, அவர் கைது செய்யப்படவுள்ளார் என்பது போன்ற வதந்திகளைக் கிளப்பி வருகின்றன. அவை அனைத்தும் பொய்யானவை. தவறான தகவல்கள். இந்த வழக்கில் என்னென்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே வதந்திகளைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
செந்தில் பாலாஜி காரணமா?
கடந்தமுறை உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டுக்கு வந்தபோது, கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு செந்தில் பாலாஜிதான் காரணம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். இது தொடர்பாக தமிழ்நாட்டின் ஊடகங்கள் விவாதம் நடத்தியிருக்க வேண்டும். இது சம்பந்தமாக அவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டதா இல்லையா என்று கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். இந்தக் கேள்விகளையெல்லாம் எழுப்பாமல், தவெக மீது மட்டும் தவறான செய்திகளை வெளியிட்டு வருவது வருந்தத்தக்கது” என்றார்.
DMK Joint General Secretary C.T.R. Nirmal Kumar said that it is regrettable that the DMK media is systematically spreading false news against Vijay.