
நகை திருடுபோன வழக்கில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற சிஆர்பிஎஃப் வீர் கலாவதி வெளியிட்ட காணொளி தவறானது என வேலூர் மாவட்ட காவல் துறை விளக்கமளித்துள்ளது.
வேலூரைச் சேர்ந்தவர் கலாவதி. சிஆர்பிஎஃப் வீரரான இவர் ஜம்மு-காஷ்மீரில் பணியமர்த்தப்பட்டுள்ளார். வேலூரிலுள்ள தனது வீட்டில் கடந்த ஜூன் மாதம் நகை மற்றும் பணம் திருடுபோனதாகவும் காவல் துறையிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கலாவதி கண்கள் கலங்கியபடி காணொளியை வெளியிட்டிருந்தார்.
இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பேசுபொருளான நிலையில், எதிர்க்கட்சியினரும் பகிரத் தொடங்கினார்கள். பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்தக் காணொளியைப் பகிர்ந்து திமுக அரசை விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
"வேலூர் மாவட்டம், காட்பாடி உட்கோட்டம், பொன்னை காவல் நிலையத்தில், கடந்த ஜூன் 24 அன்று பொன்னை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நாராயணபுரம் கிராமத்தில் வசிக்கும் குமாரசாமி என்பவர் கொடுத்த புகாரில், தனது வீட்டின் பூட்டை உடைத்து, தனது மகளின் திருமணத்துக்காக சேர்த்து வைத்த, பீரோவிலிருந்த 15 சவரன் தங்க நகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் பட்டுப்புடவை ஒன்றைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கொடுத்த புகாரின் அடிப்படையில், பொன்னை காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 25 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பொன்னை காவல் ஆய்வாளர் (ம) காவலர்கள் சம்பவ இடம் சென்று தடயங்களைச் சேகரித்து, உடனடியாக விரல்ரேகை பிரிவு நிபுணர்களைச் சம்பவ இடத்துக்கு வரவழைத்து, தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
மேலும், சம்பவ இடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களை ஆய்வு செய்ததில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத சூழ்நிலையில், டவர் டம்ப் எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சந்தேகத்துக்குரிய செல்ஃபோன் எண்களுக்கு சிடிஆர் தரவுகளைப் பெற்று புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், ஜூன் 29 அன்று புகார்தாரரிடம் மறுவிசாரணை செய்ததில், திருடுபோன நகை 22.5 சவரன் என்று வாக்குமூலம் அளித்ததன் பேரில் அதுவும் வழக்கில் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில், புகார்தாரர் தனது மகள் கலாவதியிடமிருந்து விவாகரத்து பெற்ற நபரான சந்தோஷ் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாகத் தெரிவித்ததால், அவரையும் அழைத்து விசாரணை செய்யப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பழையக் குற்றவாளிகள், சந்தேக நபர்களையும் புலன் விசாரணை செய்து வழக்கைக் கண்டுபிடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல் கால தாமதம் செய்ததாகப் பரவி வரும் காணொளியானது தவறானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Police | TN Police | Kalavathi | CRPF | Annamalai | Vellore Police | Vellore District Police