
திருநெல்வேலியில் இளம் தம்பதியினருக்கு சாதி மறுப்பு திருமணம் வைத்ததற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட அலுவலகம் நேற்று சூறையாடப்பட்டது.
திருநெல்வேலியில் 28 வயதுடைய மதன் குமார் என்பவரும், 23 வயதுடைய உதய தாட்சாயினி என்பவரும் கடந்த 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார்கள். மதன் குமார் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்றும், தாட்சாயினி முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களுடையத் திருமணத்துக்கு பெண் வீட்டார் ஒப்புக்கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து, இருவரும் திருநெல்வேலியிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதவியை நாடியியிருக்கிறார்கள். கட்சி நிர்வாகிகள் உதவியோடு, லெனின் சிலை முன்பு இருவரும் மாலை மாற்றிக்கொண்டார்கள்.
இதைத் தொடர்ந்து, பெண் வீட்டார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்குச் சென்று அங்குள்ள கண்ணாடி, கணினி, நாற்காலி உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினார்கள். இதன்பிறகு, காவல் துறை பெண் வீட்டாரை அப்புறப்படுத்தினார்கள். இதுதொடர்பாக 5 பெண்கள் உள்பட 13 பேரைக் கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை தாக்கிய கும்பலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து சாதி ஆணவப் படுகொலை நடந்து வருவது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதன் தொடர்ச்சியாகவே காதல் தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை தாக்கி ஊழியர்களை காயப்படுத்தியுள்ளார்கள். இச்சம்பவத்தை தமிழக காவல்துறை அலட்சியப்படுத்தாமல் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் - சம்பந்தப்பட்ட காதல் தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அழுத்தமாக வற்புறுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.