
வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் பட்டியலின மக்களுக்குச் சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைப் பறிக்கும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார் சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம்.
பட்டியலின மக்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்கள் மீட்பு தொடர்பாக சென்னை இன்று (பிப்.12) நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்து பெ. சண்முகம் கூறியதாவது,
`சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் கடந்த 2015 அக்டோபர் 8 அன்று பட்டியலின மக்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்க ஒரு உயர்நிலைக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட அந்த உயர்நிலைக் குழுவானது பல ஆண்டுகளுக்குப் பிறகு 2.5 லட்சம் ஏக்கர் நிலையத்தை அடையாளம் கண்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. மொத்தமுள்ள 12 லட்சம் ஏக்கரில், 2.5 லட்சம் ஏக்கர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆனால் அந்த 2.5 லட்சம் ஏக்கர் கூட இன்று வரை மீட்கப்படவில்லை. பஞ்சமி நிலத்தை மீட்டுப் பட்டியலின மக்களிடம் ஒப்படைப்பதில் திமுக, அதிமுக என இரண்டு அரசுகளும் அலட்சியமாகவும், மெத்தனத்துடனும் நடந்துகொண்டிருக்கின்றன என்பதற்கு இந்த சம்பவமே உதாரணம்.
அதேநேரம், வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் பட்டியலின மக்களிடம் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆட்சியாளர்களால் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன. பரந்தூர் விமான நிலையத்திற்கான நிலம் உட்பட பட்டியலின மக்களின் நிலங்களைப் பறிக்கும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது.
நில உச்சவரம்பு சட்டம் ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் அமலில் இருக்கிறது. இந்த 60 ஆண்டு காலத்தில் காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகியவைதான் தமிழகத்தை ஆட்சி செய்தன. ஆனால் வெறும் 2 லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே நில உச்சவரம்பு சட்டத்தைப் பயன்படுத்தி விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
நில விநியோகத்தில் தமிழக ஆட்சியாளர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள். உயர்நிலைக் குழு கண்டறிந்த 2.5 லட்சம் ஏக்கர் நிலத்தை மீட்கவாவது தற்போதைய தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றார்.