

சிறப்பாகச் செயலாற்றினால் அதற்கு உரிய மரியாதையைக் கொடுப்பவர்தான் பிரதமர் மோடி என்று குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார்.
குடியரசு துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் முதன்முறையாக தமிழ்நாட்டிற்கு வந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், கோவை கொடிசியா வர்த்தக தொழிற்காட்சி வளாகத்தில் அவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. கோவையின் பல்வேறு தொழில் அமைப்பினர் ஒன்றிணைந்து 'கோயம்புத்தூர் சிட்டிசன்ஸ் போரம்' என்ற அமைப்பின் சார்பில் பாராட்டு விழாவை நடத்தினர். அப்போது நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
”நான் தேசிய கயிறு வாரியத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற நேரத்தில் 1954-ல் இருந்து 2016 வரை கயிறு பொருள்களின் அதிகபட்ச ஏற்றுமதியே வெறும் ரூ.652 கோடியாகத்தான் இருந்தது. நான் அதை மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பாக்குவேன் என்று அறிவித்தேன்.
அப்போது ஒருநாள் பிரதமர் மோடி கோவைக்கு வருகை தந்தார். அவரைச் சந்தித்த நான் இந்தப் பொறுப்பைக் கொடுத்ததற்கு நன்றி கூறினேன். எந்தத் தலைவராக இருந்தாலும் ஒரு புன்முறுவலோடு நன்றியை ஏற்றுக்கொண்டு சென்றிருப்பார். ஆனால் பிரதமர் மோடி, நான் உன்னிடத்தில் நன்றியை எதிர்பார்க்கவில்லை. நீ சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறேன். நீ சாதித்துக் காட்டுவாய் என்ற உயர்ந்த சிந்தனையோடுதான் இப்பொறுப்பை உனக்குக் கொடுத்திருக்கிறேன் என்று கூறினார்.
மூன்று ஆண்டுகள் உருண்டோடியது. ரூ. 652 கோடியாக இருந்த கயிறு பொருள்களின் ஏற்றுமதி, ரூ.1782 கோடியாக உயர்ந்தது. பின்னர் எனது பணி நிறைவடைந்த நாளில் பிரதமர் மோடியைச் சந்தித்து ஏற்றுமதிகள் உயர்ந்ததற்கான அறிக்கையைக் கொடுத்தேன். அப்போது அவர் ஒன்றுமே சொல்லவில்லை. ஆனால் அடுத்த 2 நாள்களில் தேசிய கயிறு வாரியத்தின் தலைவராக மீண்டும் ஓராண்டு காலத்திற்கு என் பதவி நீட்டிக்கப்பட்டதாக தில்லியில் இருந்து தொலைப்பேசியில் அழைத்துத் தெரிவித்தார்கள்.
நன்றி சொன்னபோது சாதித்துக் காட்டு என்று சொன்ன தலைவர் மோடி, சாதித்துக் காட்டியவுடன் அதற்கு உரிய மரியாதையை அவராகவே வழங்கி, தேசிய கயிறு வாரியத்தின் தலைவர் பதவியை ஓராண்டு நீட்டித்துக் கொடுத்தார். இப்படிப்பட்ட தலைவர்கள் உருவாகும்போதுதான் நாடு உண்மையிலேயே உன்னத நிலையை அடையும்.
அதன்பின்னர் பிரதமர் மோடியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. என்னை எங்கேயோ அனுப்பத் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் மோடி கூறினார். உங்கள் விருப்பம்போல் செய்யுங்கள் என்று நான் கூறிவிட்டேன். அதன்பிறகு 3 நாள்கள் கழித்து தொலைக்காட்சிகளில் இருந்து தொடர்ச்சியாக அழைப்புகள் வந்தன. அவர்கள்தான் நான் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள செய்தியைச் சொன்னார்கள். நான் அதை எதிர்பார்க்கவில்லை.
அதன்பின்னர் தெலங்கானா, புதுச்சேரி, ஜார்க்கண்ட் என ஒரே நேரத்தில் மூன்று மாநிலங்களின் ஆளுநராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பைக் கொடுத்தார்கள். பின்னர் மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராக சரியாக 13 மாதங்கள் பொறுப்பில் இருந்தேன். அதன்பிறகு இப்போது மக்களின் ஆதரவாலும் ஆசிகளாலும் நாட்டின் குடியரசுத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளேன். இதெல்லாம் முயற்சி நம்முடையது ஆனால் முடிவு இறைவனுடையது என்பதைத்தான் காட்டுகிறது” என்று பேசினார்.