டாஸ்மாக்கைவிட கோமியம் கெடுதல் இல்லை: தமிழிசை சௌந்தரராஜன்

தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் ஒப்புக்கு அப்படிக் கூறிவிட முடியுமா?
டாஸ்மாக்கைவிட கோமியம் கெடுதல் இல்லை: தமிழிசை சௌந்தரராஜன்
1 min read

டாஸ்மாக்கைவிட கோமியம் கெடுதலில்லை, அதில் மருத்துவ குணம் உள்ளது எனப் பேசியுள்ளார் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

கோமியத்தில் மருத்துவ குணங்கள் உள்ளதாக ஐஐடி சென்னை இயக்குநர் வீ. காமகோடி கடந்த வாரம் பேசியது சர்ச்சையானது. இந்த விவகாரம் தொடர்பாக, நேற்று (ஜன.21) அவர் விளக்கமளித்தார். இந்நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது,

`கோமியம் என்பது ஆயுர்வேதம் சார்ந்தது. நுண் கிருமிகளை அழிக்கும் தன்மை கோமியத்திற்கு உள்ளது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனாலேயே வீட்டிற்கு முன்பு கோமியம் தெளிப்பது வழக்கமாக உள்ளது. ஆராய்ச்சியில் அது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மாட்டின் சிறுநீர் எனப்படும் கோமியம் மருந்து என்று ஆயுர்வேதத்தில் உள்ளது. குறிப்பாக, அமிர்த நீர் என்று கோமியம் குறிப்பிடப்படுகிறது. நமது சங்க இலக்கியத்தில் மாட்டுச் சாணம் வைத்து மெழுகப்பட்ட முற்றங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது. மாட்டுச் சாணம் கிருமி நாசினி என்றால், மாட்டுச் சிறுநீரும் கிருமி நாசினி என்பதே அர்த்தம்.

பிற விலங்குகள் குறித்து நாம் அப்படிக் கூறுவதில்லை. ஆனால் கோமியத்திற்கு மருத்துவ குணம் உள்ளது. மியான்மர், ஆப்ரிக்க நாடுகளில் இதை எடுத்துக்கொள்ளும் வழக்கம் உள்ளது. எனவே இதை ஒரேடியாக புறந்தள்ள முடியாது. 80 வகையான நோய்களுக்கு அதைப் பயன்படுத்தலாம் என ஆயுர்வேதம் கூறுகிறது.

தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் ஒப்புக்கு அப்படி கூறிவிட முடியுமா? மாட்டிறைச்சி குறித்து என் உணவு என் உரிமை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் கோமியத்தை அறிவியல்பூர்வமாக மருந்து என்று கூறினால் மட்டும் ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர்.

அப்படிக் கூறுவதில் அவருக்கு (காமகோடி) என்ன உள்நோக்கம் இருக்க முடியும்? நான் அலோபதி மருத்துவம் படித்திருந்தாலும், ஆயுஷ் என்கிற ஒருங்கிணைந்த மருத்துவத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது. கோமியம் விற்பனை அதிகரித்தால் டாஸ்மாக் விற்பனை குறைந்துவிடும் என நினைக்கிறார்களோ என்னவோ. ஆனால் கோமியம் டாஸ்மாக்கை விட கெடுதல் இல்லை’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in