தமிழக அரசு அதிகாரிகளை தீவிரமாக கண்காணிப்போம் எனக்கூறி, வேலூர் சிறை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் தண்டனைக் கைதியாக உள்ளார். சிவக்குமாரை வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி ராஜலட்சுமி தன் வீட்டு வேலைக்குப் பயன்படுத்தியதோடு, அவரது வீட்டில் இருந்த பணம் காணாமல் போனதற்கு சிவக்குமார் மீது சந்தேகப்பட்டு அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, சிவக்குமாரின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் நேரில் நடத்திய விசாரணையில், சிறையின் தனி அறையில் 100 நாள்கள் அடைக்கப்பட்டு சிவக்குமார் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது நீதித்துறை நடுவர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், சேலம் மத்திய சிறைக்கு சிவக்குமார் மாற்றப்பட்டார்.
இதனை அடுத்து சிவக்குமாரை துன்புறுத்தியதற்குக் காரணமாக இருந்த, வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, வேலூர் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், வேலூர் மத்திய சிறை ஜெயிலர் அருள் குமரன், டிஐஜியின் நேர்முக உதவியாளர் ராஜூ உள்ளிட்ட 14 காவல்துறை அதிகாரிகள் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் சிவக்குமாரின் தாயார் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், வி. சிவஞானம் அமர்வு இன்று வழங்கியது. அதில்
`டிஐஜி ராஜலட்சுமிக்கு எதிரான குற்ற வழக்கை விசாரணை நீதிமன்றம் விரைவாக விசாரிக்க வேண்டும். அத்துடன் டிஐஜி ராஜலட்சுமி மீது துறை ரீதியிலான நடவடிக்கையையும் எடுக்கவேண்டும். குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி துறைரீதியிலான நடவடிக்கை எடுப்பதை தாமதிக்கக்கூடாது.
சிறைக் கைதிகள் இவ்வாறு வீட்டுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனரா என்பதை சிறைத்துறை டிஜிபி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வீட்டுப் பணிகளுக்கு கைதிகளை மட்டுமல்ல, ஆர்டர்லியாக காவல்துறையினரையும் ஈடுபடுத்தக்கூடாது. அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துகின்றனரா என்பதை தீவிரமாக கண்காணிப்போம்’ என்றனர்.