
கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று வந்தாலும், அதனால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுவதில்லை; எனவே பொதுமக்கள் பதற்றப்படத் தேவையில்லை என்று தமிழக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (மே 31) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மா. சுப்பிரமணியன் பேசியதாவது,
`2019 இறுதியில் கொரோனாவின் தாக்கம் கண்டறியப்பட்டு, உலகம் முழுவதும் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் உருமாற்றம் பெற்று ஆல்ஃபா, காமா, ஒமைக்ரான் எனப் பல்வேறு பெயர்களுடன் வலம் வரத் தொடங்கியது.
கொரோனா பாதிப்பு தொடர்பாக உலக சுகாதார மையம் பிரகடனப்படுத்திய நெருக்கடி நிலை, 2023 மே 5-ம் தேதி வரையில் அமலில் இருந்தது. அதன்பிறகு நெருக்கடி நிலை ஏற்படவில்லை. கொரோனா உருமாற்றம் பெற்று வந்தாலும், அதனால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுவதில்லை.
2-3 நாள்கள் சளி, காய்ச்சல், இருமல் போன்ற உடல் உபாதைகளுடன் கொரோனா பாதிப்பு முடிந்துவிடுகிறது. அந்த வகையில்தான் இந்தியா முழுவதும் 1800-க்கும் மேற்பட்டவர்களுக்கு தற்போது கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டால் இந்த எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது.
பாதிப்புகள் உயரத் தொடங்கியதும், தமிழக பொது சுகாதார இயக்குநரகம் சார்பில் புனே ஆய்வு மையத்திற்கு 19 மாதிரிகள் அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவுகளின்படி இவை அனைத்துமே வீரியம் இல்லாத ஒமைக்ரான் வகையிலான கொரோனா என்பது தெரியவந்துள்ளது. இதனால் யாரும் பதற்றப்படவேண்டியதில்லை.
மத்திய சுகாதார அமைச்சகத்தால் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், பொதுமக்கள் அடிக்கடி கைகளைக் கழுவவேண்டும், முகத்தை பொத்திக்கொண்டு தும்மவேண்டும் என்பது போன்ற வழக்கமான அறிவுறுத்தல்கள்தான் உள்ளன.
நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், முதியோர்கள், சிறுநீரக பாதிப்பு உள்பட பல்வேறு உடல் உபாதைகளுடன் இருப்பவர்கள் பொது இடங்களுக்கு சென்றால் முகக்கவசம் அணிவது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.