
சிகிச்சை வழங்க போதிய மருத்துவர்கள் இல்லாததால் கிண்டி அரசு மருத்துவமனையில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த நவ.13-ல் கிண்டி அரசு மருத்துமனையில் மருத்துவர் பாலாஜி தாக்குதலுக்கு ஆளானதை கண்டித்து, அன்று மாலை 6 மணி தொடங்கி அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதேநேரம் அவசர சிகிச்சை பிரிவு மட்டும் செயல்படும் என மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்நிலையில் கடந்த நவ.13 இரவில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த விக்னேஷ் (31) என்பவர், சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் உயிரிழந்துவிட்டதாக இன்று (நவ.15) காலை விக்னேஷின் உறவினர்கள் கிண்டி மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக உயிரிழந்த விக்னேஷின் சகோதரர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு,
`எனது தம்பி விக்னேஷுக்கு கடந்த 13-ம் தேதி இரவில் வயிற்று வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதித்தோம். பித்தப் பையில் கற்கள் இருந்ததை அடுத்து சக்கர நாற்காலியில் வைத்து அவனை அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் ஊசி மட்டும் செலுத்திவிட்டு, அதன்பிறகு என் தம்பியை பொது வார்டுக்கு மாற்றினர்.
அன்று இரவு தொடங்கி மறுநாள் (நவ.14) இரவு வரை என் தம்பிக்கு எந்தவிதமாக சிகிச்சையும் வழங்கப்படவில்லை. அவனுக்கு நாடித்துடிப்பு இருக்கிறதா, ரத்த அழுத்தம் எவ்வளவு என எதையும் அவர்கள் பரிசோதிக்கவில்லை. நேற்று (நவ.14) இரவு 10 மணி அளவில் அவனுக்கு மூச்சு வாங்கியதும் சுவாசிக்கும் கருவிகளைப் பொருத்தி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான்.
அதன்பிறகும் அவனுக்கு எந்த சிகிச்சையும் வழங்கவில்லை. எந்த மருத்துவரும் அவனைப் பரிசோதிக்கவில்லை. ஒரு மருத்துவருக்கு ஏதாவது என்றால் உடனடியாக அனைத்து விஷயங்களும் மேற்கொள்ளப்படுகிறது.
என் தம்பியின் இறப்புக்கு யார் பதில் கூறுவார்கள்? மருத்துவர்கள் இல்லையென்று கூறியிருந்தால் என் தம்பியை வேறு எங்காவது அழைத்துச் சென்றிருப்போம். சிகிச்சை அளிக்கிறோம் என்று கூறி என் தம்பியைக் கொன்றுவிட்டனர்’ என்றார்.
கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, பித்தப்பை கல் பிரச்னைக்காக தனியார் மருத்துவமனையில் விக்னேஷ் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தார் எனவும், அங்கு சிகிச்சை அளிக்க போதிய பணம் இல்லாததால் கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார் எனக் கூறப்படுகிறது.
மருத்துவமனை வளாகத்தில் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போராட்டம் நடத்திய விக்னேஷின் உறவினர்களை அங்கிருந்த காவல்துறையினர் சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
விக்னேஷை பரிசோதித்து அவருக்கு முறையான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டதாகவும், உடல்நிலை மோசமான பிறகு அவரை அவசர சிகிச்சை வார்டுக்கு மாற்றி உயர் சிகிச்சை வழங்கியதாகவும் கிண்டி அரசு மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.