
ஹிந்தி மாத நிறைவு விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் திராவிடநல் திருநாடும் என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் (தூர்தர்ஷன் தமிழ்) பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து ஹிந்தி மாதம் நிறைவு விழா கொண்டாட்டங்களும் நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக இதில் கலந்துகொண்டார்.
இந்த விழாவுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள் ஹிந்தி திணிப்பு என விமர்சித்து வந்தன. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதிய முதல்வர் மு.க. ஸ்டாலின், "இந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி மாத நிறைவு விழா கொண்டாட்டங்கள் போன்ற இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்கலாம் அல்லது ஒன்றிய அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால், அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் மொழிக்கான மாதக் கொண்டாட்டங்களையும் அதேபோல் கொண்டாட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி, ஹிந்தி திணிக்கப்படவில்லை என்று பேசினார்.
"50 ஆண்டுகளாக ஹிந்திக்கு எதிராக பேச வைத்துள்ளார்கள். மக்களுடைய மூளையில் விஷம் ஏற்றப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தமிழர்கள் மத்தியில் ஹிந்தியைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளது. இந்தியாவில் மொத்தம் 27 மாநிலங்களில் மும்மொழிக் கொள்கைகள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் மூன்றாவதாக ஒரு மொழியை அனுமதிக்க மறுக்கிறார்கள்" என்றார் ஆளுநர் ஆர்.என். ரவி.
அதேவேளையில் இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் பாடல் பாடப்பட்டது. இதில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடு' என்ற வரிகள் மட்டும் இடம்பெறவில்லை. இந்த வரிகள் திட்டமிடப்பட்டு தவிர்க்கப்பட்டதா என்ற சர்ச்சை அரசியல் களத்தில் எழுந்துள்ளது.