
மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்ட சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு, ஜாமின் வழங்கியது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.
பரம்பொருள் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு, கடந்த செப்டம்பரில் சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்தினார். இந்த இரு பள்ளிகளிலும் அறிவியலுக்குப் புறம்பாக இவர் பேசியிருக்கிறார்.
சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணுவின் பேச்சை அதே இடத்தில் தட்டிக்கேட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் என்பவர் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டார். இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி விவகாரம் பூதாகரமானது. இதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியதாக இவர் மீது சைதாப்பேட்டை, திருவொற்றியூர் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டன.
இதனை அடுத்து கடந்த செப்.14 பிற்பகலில் ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த மகாவிஷ்ணுவைக் காவல் துறையினர் கைது செய்தனர். சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் மகாவிஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் மகாவிஷ்ணு.
இந்நிலையில் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் மகாவிஷ்ணு. தன்னுடைய பேச்சை எடிட் செய்து யூடியூப் பக்கத்தில் வெளியிட்டதாகவும், முழு பேச்சு அதில் இடம்பெறவில்லை எனவும், மாற்றுத்திறனாளிகள் குறித்த தன்னுடைய கருத்து அவர்களை புண்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கோருவதாகவும் ஜாமின் மனுவில் குறிப்பிட்டிருந்தார் மகாவிஷ்ணு.
மகாவிஷ்ணுவின் ஜாமின் மனுவை இன்று (அக்.3) காலை விசாரித்த, சென்னை முதன்மை அமர்வு நீதிபதி கார்த்திகேயன், மகாவிஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.