
பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள ராட்வீலர் உள்ளிட்ட ஆக்ரோஷமான நாய்களை முறைப்படுத்தக் கோரிய வழக்கில் உரிய விளக்கங்களுடன் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி நேரில் ஆஜராகும்படி, தமிழ்நாட்டின் தலைமை கால்நடை அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில், உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமல் அழைத்துச் செல்லப்பட்ட ராட்வீலர் உள்ளிட்ட நாய்கள் கடித்து சிறுவர், சிறுமியர், வயதானோர் போன்ற பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக அண்மைக் காலமாக அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், ராட்வீலர் போன்ற ஆக்ரோஷமான நாய்களை தடை செய்வது அல்லது முறைப்படுத்துவதற்கு, சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடக்கோரி கோடம்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ். தமிழ்வேந்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `பொதுமக்களை நாய்கள் தாக்கும் சம்பவங்களை கட்டுப்படுத்துவது குறித்த திட்டத்தை தாக்கல் செய்யவிருப்பதாகவும், அதற்கு உரிய அவகாசம் வழங்கவேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்.
இதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ராட்வீலர் உள்ளிட்ட ஆக்ரோஷமான நாய்களை கட்டுப்படுத்துவது குறித்த உரிய விளக்கங்களுடன் இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணையின்போது நேரில் ஆஜராகும்படி, தலைமை கால்நடை அதிகாரிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்பிறகு, இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 12-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.