
அமைச்சர் பொன்முடிக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், முன்பு அவர் மீது சேற்றை வீசிய கிராமத்தினர் மீது தமிழக அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டிருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் வீசிய ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசூர், இருவேல்பட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது பொதுமக்களின் குறையைக் கேட்டறிய முயன்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டது. இது தொடர்பாக பாஜக நிர்வாகி விஜயராணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜன.15) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
`விழுப்புரம் மாவட்டம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், காவல்துறையினரின் அத்துமீறலைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இருவேல்பட்டு கிராம மக்கள் மீது காவல்துறையினர் கடுமையாக அடக்குமுறையை கட்டவிழ்த்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆண் காவலர்கள் அவமானப்படுத்தும் வகையில் இழுத்துச் சென்று அப்புறப்படுத்தியுள்ளனர். உண்மையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அகற்ற வேண்டும் என்பது காவல்துறையின் நோக்கம் இல்லை.
மாறாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை பழிவாங்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்த அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
சேறு வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று அமைச்சர் பொன்முடி அப்போதே கூறியிருந்தாலும், அதிகாரிகள் பெயரில் புகார் அளிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மேலும், அந்த ஊர் மக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதைக் கண்டித்துதான் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துவதில் தவறு இல்லை. ஆனால், கலைந்து சென்ற மக்களை பயங்கரவாதிகளைப் பிடிப்பதைப் போல காவல்துறையினர் பிடித்துள்ளனர். இத்தகைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா, காவல்துறை ஆட்சியா? என்ற சந்தேகம் எழுகிறது. இவற்றுக்கு மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை’ என்றார்.