
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனைத் தவிர, மேலும் ஒருவருக்கு குற்றத்தில் தொடர்பிருப்பதாக கூறுவது நீதிமன்ற அவமதிப்பு என்று அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் எம்.பி. மேரி ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பின்றி ஆயுள் தண்டனை வழங்கி சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று (ஜூன் 2) உத்தரவிட்டது.
தண்டனை விபரங்கள் வெளியான பிறகு அரசுத் தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
`மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இன்றைக்கு கிடைத்துள்ளது. இதில், அனைத்து சாட்சிகளும் அரசுத் தரப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். ஏக காலத்தில் இந்த 30 ஆண்டுகால தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
அந்த 11 குற்றச்சாட்டுகளுக்கான தண்டனைகள் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளன. தண்டனை குறைப்புக்கு மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. ஆனால் அதை குற்றவாளிதான் முடிவுசெய்ய வேண்டும்.
அதை தவிர வேறொரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த நினைக்கிறேன். மற்றொரு நபர் இதில் சம்மந்தப்பட்டிருப்பதாக முன்வைக்கப்பட்ட விவாதங்களை நான் பார்த்தேன். அது குறித்து தெளிவுபடுத்த நினைக்கிறேன்.
முதலில், குற்றவாளியின் செல்போன்தான் இந்த வழக்கில் முக்கியமான ஆயுதம். அந்த செல்போனை நீதிமன்றம் மூலமாக தடயவியல் ஆய்வுக்கு நாங்கள் அனுப்பினோம். செல்போனில் இருந்த விஷயங்கள் அனைத்தையும் ஆய்வு செய்யவே அனுப்பப்பட்டது.
குறிப்பாக, சம்பவ தினமான (டிசம்பர்) 23 அன்று, செல்போனின் செயல்பாடு குறித்து மேற்கொண்ட ஆய்வில், அது ஃப்ளைட் மோடில் இருந்ததாக தடயவியல் துறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. சம்பவம் நடைபெற்ற நேரத்தில் செல்போன் ஃப்ளைட் மோடில் இருந்தது ஆவணப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டு, அந்த நிபுணர் நீதிமன்றத்தில் வாய்மொழி சாட்சியம் அளித்தார்.
குற்றவாளியின் சிம் கார்டு ஏர்டெல் நிறுவனத்தைச் சேர்ந்தது. அந்த நிறுவனத்தின் அதிகாரி நீதிமன்றத்திற்கு வந்து, சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அந்த செல்போன் ஃப்ளைட் மோடில் இருந்தது என்று தெளிவாக எடுத்துரைத்தார். இந்த விவகாரத்தில் மேலும் ஒருவர் சம்மந்தப்பட்டிருப்பதாக நீதிமன்றம் கருதினால், அந்த நபரை வழக்கில் சேர்த்து விசாரணை நடத்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.
சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களில் நீதிமன்றம் திருப்தியடைந்ததால்தான், இந்த தீர்ப்பை இன்றைக்கு வழங்கியுள்ளது. எனவே இதன்பிறகு இதைப் பற்றிப் பேசினால் அது நீதிமன்ற அவமதிப்பாகும்’ என்றார்.