நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக ஐஏஎஸ் அதிகாரிக்கு ஒரு மாதம் சிறை தண்டனை!

2025 பிப்ரவரியில் மனுதாரர்களை அழைத்துப் பேசி, உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அமல்படுத்தப்பட்டதாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் கூறப்பட்டது.
அன்சுல் மிஸ்ரா
அன்சுல் மிஸ்ரா
1 min read

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக லலிதாம்பாள், அவரது சகோதரர் விஸ்வநாதன் ஆகியோருக்குச் சொந்தமான 17 சென்ட் நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1983-ல் கையகப்படுத்தியது. அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படாததால் அந்த நிலத்தை திரும்ப வழங்கவேண்டும் என்று 2003-ல் அவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர்களின் கோரிக்கையை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி 10.5 சென்ட் நிலத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள 6.5 சென்ட் நிலத்தை சாலை விரிவாக்கத்துக்காக அரசு வைத்துக்கொண்டது.

ஒரு கட்டத்தில் அந்த நிலமும் பயன்படுத்தாததால், அதை திருப்பி அளிக்குமாறு மீண்டும் உயர் நீதிமன்றத்தில் லலிதாம்பாள் மற்றும் விஸ்வநாதன் வழக்கு தொடர்ந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, மனுதாரர்களை நேரில் அழைத்து விசாரித்து இரண்டு மாதங்களில் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கக் கூறி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு 2023-ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி அன்றைய சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. 2025 பிப்ரவரியில் மனுதாரர்களை அழைத்துப் பேசி, உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அமல்படுத்தப்பட்டதாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் கூறப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, குறிப்பிட்ட காலத்தில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்புதான் என்று கூறி, அன்றைய சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்ததுடன், ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இந்த அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு வழங்க அவர் உத்தரவு பிறப்பித்தார். அதன்பிறகு அன்சுக் மிஸ்ரா மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக இந்த தண்டனையை நிறுத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in