அன்னபூர்ணாவில் க்ரீம் பன்னுக்கு ஜிஎஸ்டி 18% இல்லையா?: வாடிக்கையாளர் எழுப்பும் கேள்வி

SAC 996334 என்ற குறியீட்டின் கீழ் கண்காட்சிகள், திருமணங்கள், விழாக்கள் போன்றவற்றில் வழங்கப்படும் சேவைகளுக்கு மட்டுமே ஜிஎஸ்டி விதிக்கப்படும்
அன்னபூர்ணாவில் க்ரீம் பன்னுக்கு ஜிஎஸ்டி 18% இல்லையா?: வாடிக்கையாளர் எழுப்பும் கேள்வி
1 min read

கடந்த செப்.11-ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையிலுள்ள கொடிசியா வளாகத்தில் தொழில் துறையினரைச் சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார். இதில் அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாகத் தலைவர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

குறிப்பாக, `பன்னுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை, ஆனால் க்ரீம் பன்னுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்தினர் ஹோட்டலுக்கு வந்து சாப்பிட்டால் ஜிஎஸ்டி விலையில் மாற்றம் ஏற்படுகிறது. எங்களுடையக் கணினியே குழம்பிவிடுகிறது’ என்று பேசியிருந்தார் அன்னபூர்ணா சீனிவாசன். இந்த வேறுபாடான ஜிஎஸ்டி வரி விதிப்பால் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் எங்களுடன் சண்டைக்கு வருகிறார் என்றும் அவர் பேசியிருந்தார்.

அன்னபூர்ணா சீனிவாசன் பேசும் காணொளி வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து நிதியமைச்சரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார் சீனிவாசன். அந்தக் காணொளியும் வெளியாகி தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தி ஹிந்து நாளிதழைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ப்ரீத்தா என்பவர் தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் கோவை அன்னபூர்ணாவில் வாங்கிய க்ரீம் பன்னின் விலை குறித்துப் பதிவிட்டுள்ளார்.

கடந்த செப்.14-ம் தேதியிட்ட கோவை கணபதி அன்னபூர்ணா ஹோட்டல் கிளையின் ரசீதில், க்ரீம் பன்னுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருக்கிறது. இதை அடுத்து செப்.15-ம் தேதியிட்ட கோவை பெரிய கடை வீதி அன்னபூர்ணா ஹோட்டல் கிளையின் ரசீதில் க்ரீம் பன்னுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வேறுபாடான ஜிஎஸ்டி வரிவிதிப்பு மீண்டும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

மேலும் ப்ரீத்தா பதிவிட்ட 14-ம் தேதியிட்ட ரசீதை மேற்கோள்காட்டி அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் SAC 996334 என்ற குறியீட்டைச் சுட்டிக்காட்டி சதீஷ் குமார் என்பவர் தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டிருக்கிறார்.

அதில், `SAC 996334 என்ற குறியீட்டின் கீழ் கண்காட்சிகள், திருமணங்கள், விழாக்கள் போன்றவற்றில் வழங்கப்படும் சேவைகளுக்கு மட்டுமே ஜிஎஸ்டி விதிக்கப்படும். இதன் கீழ் ஹோட்டல்களில் வழங்கப்படும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கமுடியாது. மேலும் பன் என்பது சரக்கு, சேவை கிடையாது’ என்று குறிப்பிட்டுள்ளார் சதீஷ் குமார். இந்தப் பதிவும் சமூக வலைதளங்களில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in