
வள்ளுவர், வள்ளலாரைக் களவாட ஒரு கூட்டம் சதி செய்து வருவதாக காரைக்குடியில் நடந்த விழாவில் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருமதி லக்ஷ்மி வளர்தமிழ் நூலகம் மற்றும் அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை ஆகியவற்றை இன்று (ஜன.21) திறந்து வைத்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,
`குமரி வள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா கொண்டாடப்படும் நேரத்தில், இந்த சிலையைத் திறந்து வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வள்ளுவர் நெறி வாழ்வியல் நெறியாக மாற வேண்டும் என்று தொடர்ந்து கூறுகிறோம். குறள் நெறி பின்பற்றப்பட்டால்தான் தமிழ்நாடும், உலகமும் காப்பாற்றப்படும்.
அப்படிக் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் வள்ளுவரை யாரும் கபளீகரம் செய்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தமிழ் மண்ணில் சமத்துவம் பேசிய வள்ளுவர், வள்ளலார் போன்ற மாமனிதர்களைக் களவாட ஒரு கூட்டமே இன்றைக்கு சதி செய்து வருகிறது. அதற்கு எதிரான காவலனாக ஒவ்வொரு தமிழனும் இருக்கவேண்டும்.
நமது அரசு அமைந்த பிறகு கல்விக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களை செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். இந்தியாவிலேயே உயர்கல்வியில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் 32 அரசு கலை அறிவியல் கல்லூரிகளை தொடங்கியிருக்கிறோம்.
நான் முதல்வன் திட்டம் மூலமாக 22 லட்சத்து 56 ஆயிரம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி தந்திருக்கிறோம். தமிழக அரசு திட்டங்களால் தமிழ்நாட்டிற்கு உயர் கல்வியின் தரமும், அடிப்படை கட்டமைப்பு வசதியும் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால்தான் இன்று இந்தியாவிலேயே அதிக அளவிலான அரசு பல்கலைக்கழகங்கள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கையில் தேசிய சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகமாக 49 சதவீதம் பெற்று தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எனவே பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். வேந்தர் பதவியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இருக்கவேண்டும்.
பள்ளி முதல் உயர்கல்வி வரை ஒவ்வொரு மாணவருக்கும் பார்த்துப் பார்த்து திட்டங்களை உருவாக்கி செலவு செய்வது மாநில அரசு. பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சம்பளம் கொடுப்பது மாநில அரசு. பல்கலைக்கழகங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது மாநில அரசு.
ஆனால் வேந்தர் பதவி மட்டும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒருவருக்குக் கொடுத்தால் எப்படி? அதனால்தான் சட்டப்போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம்’ என்றார்.