தீ விபத்தில் சதி திட்டம்: ஏடிஜிபி குற்றச்சாட்டும், டிஜிபியின் மறுப்பும்!

தடயவியல் துறை நிபுணர்கள், தனியார் ஏர் கண்டிஷன் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் மாற்றப்பட்டது.
தீ விபத்தில் சேதமான அலுவலக அறை
தீ விபத்தில் சேதமான அலுவலக அறை
1 min read

தன் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நோக்கில் தனது அறைக்குத் தீ வைக்கப்பட்டதாக ஏடிஜிபி கல்பனா நாயக் எழுப்பிய குற்றச்சாட்டை மறுத்துள்ளார் தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால்.

தற்போது தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் ஏடிஜிபியாக பணியாற்றி வருகிறார் கல்பனா நாயக். இதற்கு முன்பு கடந்தாண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஐஜியாக இவர் பணியாற்றினார். அப்போது கடந்தாண்டு ஜுலை 28-ல் சென்னை எழும்பூரில் உள்ள கல்பனா நாயக்கின் அலுவலக அறையில் திடீரென தீப்பிடித்தது.

தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தாலும், இந்த தீ விபத்தில் பல்வேறு ஆவணங்கள் தீயில் கருகி சேதமடைந்தன. இந்த தீ விபத்து தொடர்பாக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அப்போது கடிதம் எழுதியுள்ளார் கல்பனா நாயக்.

அதில், `தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியதால், தன் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் சதி திட்டம் தீட்டப்பட்டு, தனது அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டதாக’ அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

காவல்துறை டிஜிபிக்குக் கல்பனா நாயக் எழுதிய அந்தக் கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. அதை முன்வைத்து தமிழக அரசை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ளார் காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

`கடந்தாண்டு ஆக.14-ல் ஏடிஜிபி கல்பனா நாயக்கிடம் இருந்து வரப்பெற்ற கடிதத்தை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக எழும்பூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.

இது தொடர்பாக தடயவியல் துறை நிபுணர்கள், தனியார் ஏர் கண்டிஷன் நிறுவன நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் மாற்றப்பட்டது.

இதற்கிடையே நிபுணர்கள் குழு அளித்த அறிக்கையில், ஏடிஜிபி அலுவலக அறையில் இருந்த காப்பர் வயர்ஹள் மூலம் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் போன்ற எளிதில் தீப்பிடிக்கக்கூடிய எந்த எரிபொருளும் அறையில் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. எனவே ஏடிஜிபி கல்பனா நாயக்கின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்த சதித்திட்டமும் இல்லை’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in