
93 வயதான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்கோளாரால் காலமானார்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த குமரி அனந்தன், 19 மார்ச் 1933 அன்று பிறந்தார். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு, பல்வேறு மக்கள் பிரச்னைகளுக்காக களத்தில் நின்று போராடியுள்ளார். குறிப்பாக, மக்கள் நலனுக்காகத் தமிழகம் முழுவதும் பலமுறை நடைபயணங்கள் மேற்கொண்டார்.
1977 மக்களவைத் தேர்தலில், நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். நாடாளுமன்றத்தில், தமிழில் கேள்வி கேட்கும் உரிமையைப் போராடிப் பெற்றுத்தந்தார். இதன் மூலம், முதல்முறையாக இந்திய நாடாளுமன்றத்தில் தமிழில் பேசிய பெருமை இவரது வசமானது.
அதன்பிறகு, 1980-ல் திருவொற்றியூர் (சென்னை), 1984-ல் ராதாபுரம் (திருநெல்வேலி), 1989 மற்றும் 1991-ல் சாத்தான்குளம் (தூத்துக்குடி) என வெவ்வேறு தொகுதிகளில் இருந்து தேர்தெடுக்கப்பட்டு, தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராகத் திறம்பட பணியாற்றினார்.
இதைத் தொடர்ந்து, 1995 முதல் 1997 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பணியாற்றினார். தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 2021-ல் பெருந்தலைவர் காமராசர் விருதையும், 2024-ல் தகைசால் தமிழர் விருதையும் இவருக்கு வழங்கி, தமிழ்நாடு அரசு கௌரவித்துள்ளது.
சிறந்த மேடைப் பேச்சாளராகவும், இலக்கியவாதியாகவும் திகழ்ந்த `குமரி அனந்தன்’ சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்டார். தமிழ் அமுது, கலித்தொகை இன்பம், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் உள்ளிட்ட பல்வேறு நூல்களை அவர் எழுதியுள்ளார்.
கடந்த 2020-ல் மறைந்த தொழிலதிபரும், மக்களவை உறுப்பினருமான வசந்தகுமார் இவரது சகோதரர். பாஜக மூத்த தலைவரும், தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் பணியாற்றிய தமிழிசை சௌந்தரராஜன் இவரது மகளாவார்.
93 வயதான குமரி அனந்தன், வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்கோளாறால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்ரல் 9) அதிகாலை காலமானார். இதைத் தொடர்ந்து, தமிழிசை சௌந்தரராஜனின் சாலிக்கிராமம் இல்லத்தில், குமரி அனந்தனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
குமரி அனந்தனின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.