தில்லியில் தமிழக எம்.பி. சுதாவிடம் சங்கிலி பறிப்பு! | Chain Snatching | Sudha MP | Delhi

நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒரு பெண் மீது நடத்தப்பட்ட இந்த அப்பட்டமான தாக்குதல், மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
சுதா எம்.பி. - கோப்புப்படம்
சுதா எம்.பி. - கோப்புப்படம்
1 min read

தலைநகர் தில்லியில் இன்று (ஆக. 4) காலை தனது சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்த நிகழ்வைத் தொடர்ந்து, அது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. ஆர். சுதா கடிதம் எழுதியுள்ளார்.

தில்லியில் பாதுகாப்பு நிறைந்த சாணக்கியபுரி பகுதியில் உள்ள போலந்து நாட்டுத் தூதரகத்திற்கு அருகே இன்று காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தனது தங்கச் சங்கிலியைப் பறித்துச்சென்றதாக மக்களவை எம்.பி. சுதா குற்றம்சாட்டினார்.

இந்த நிகழ்வின்போது ஏற்பட்ட களேபரத்தில் அவரது கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மாநிலங்களவை திமுக எம்.பி. சல்மா அவருடன் இருந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு சுதா எழுதிய கடிதத்தில் கூறியதாவது,

`எதிர் திசையில் இருந்து முழு தலைகவசம் அணிந்து ஸ்கூட்டியில் வந்த ஒரு நபர், எனது தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். என் கழுத்தில் இருந்த சங்கிலியை அவர் பறித்ததால், எனது கழுத்தில் காயம் ஏற்பட்டது, மேலும் அந்த நிகழ்வின்போது எனது சுடிதாரும் கிழிந்தது.

தூதரகங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட அலுவலகங்கள் நிறைந்த சாணக்யபுரி போன்ற உயர் பாதுகாப்புப் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒரு பெண் மீது நடத்தப்பட்ட இந்த அப்பட்டமான தாக்குதல், மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

இந்தியாவின் தேசிய தலைநகரில் உள்ள இந்த உயர் பாதுகாப்புப் பகுதியில் ஒரு பெண்ணால் பாதுகாப்பாக நடக்க முடியவில்லை என்றால், வேறு எங்கு நாம் பாதுகாப்பாக உணர முடியும்?’ என்றார்.

மேலும், தனது கடிதத்தில் குற்றவாளியை விரைவாகக் கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு உள்துறை அமைச்சரிடம் அவர் வலியுறுத்தினார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுவதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றும், அருகிலுள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன என்றும், இது குறித்து தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி இந்தியா டுடேவிடம் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in