

திமுக தோற்ற இடங்களைத் தான் காங்கிரஸ் கேட்கிறது. அதிகாரப் பகிர்வு எங்கள் உரிமை என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பதிவு வெளியிட்டுள்ளார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தேவை என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சியின் ஒரு தரப்பினரால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. ஒருபுறம் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. மறுபுறம் காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து விலகி தவெகவுடன் கூட்டணி அமைக்குமா என்று பல்வேறு தரப்புகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் தரவு பாதுகாப்புப் பிரிவின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி போன்றோர், ஆட்சி அதிகாரத்தில் திமுக பங்கு தர வேண்டும் என்ற கருத்தை வெளிப்படையாக முன் வைத்து வருகின்றனர்.
கூட்டணி ஆட்சி ஒத்து வராது
குறிப்பாக கடந்த பிப்ரவரி 11 அன்று இந்தியா டுடே தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குப் பேட்டியளித்த முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, கூட்டணி ஆட்சி என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்து வராது என்று பதிலளித்திருந்தார். இந்தக் கருத்துக்கும் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் விமர்சனப் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில், “மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை. 2006-ல் மக்கள் தீர்ப்பைச் செயல்படுத்தாதது காங்கிரஸ் கட்சியின் தவறு” என்று பதிவிட்டிருந்தார்.
அமைச்சர் கருத்துக்குப் பதில்
இதையடுத்து, அமைச்சர் ராஜகண்ணப்பன் மதுரையில் பேசியதற்குப் பதில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மதுரை மாவட்டம் முனிச்சாலை பகுதியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது:-
“தற்போதைய நிலவரத்தை நாங்கள் சொல்கிறோம். நாம் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைப்போம் என்று சொல்கிறோம். கூட்டணி வேண்டாம் என்று சொல்லவில்லை. அதற்கு எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இந்த விவகாரத்தில் தலைவர் ஸ்டாலின் தெளிவாகச் சொல்லிவிட்டார். ஆட்சியில் பங்கு கிடையாது. இந்தத் தேர்தலில் திமுக 170 தொகுதிகளில் நிற்கும்.150 முதல் 160 தொகுதிகளில் வெற்றி பெறும். உதய சூரியன் என்பது ஒரு மாதிரி. மற்ற சின்னங்களெல்லாம் வேறு மாதிரியானவை” என்று பேசியிருந்தார்.
நீங்கள் தோற்ற இடங்களைக் கேட்கிறோம்
அதற்குப் பதிலளிக்கும் விதமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளதாவது: “2021-ல் 173 தொகுதிகளில் போட்டியிட்டு 133 தொக்திகளில் வெற்றி பெற்றது திமுக. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களைத்தான். அதிகாரப் பகிர்வு அவசியம். ஆட்சியில் பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
Congress is only asking for the seats where DMK lost. Congress MP Manickam Thakur has posted that power sharing is our right.