உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் தாம் பங்கேற்றது காங்கிரஸையும், அதைச் சார்ந்தவர்களையும் ஆத்திரப்படுத்தியுள்ளதாக ஒடிஷா மாநிலத்தில் நடந்த அரசு விழாவில் பேசியுள்ளார் பிரதமர் மோடி.
கடந்த செப்.10-ல் இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொண்டு அங்கிருந்த விநாயகர் சிலைக்குப் பூஜை செய்தார் பிரதமர் மோடி. இந்த நிகழ்வுக்குக் கண்டனத்தைத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
அரசு நிர்வாகம் மற்றும் நீதித்துறைக்கு இடையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் கடைபிடிக்க அறிவுறுத்திய அதிகார இடைவெளியை தலைமை நீதிபதி சமரசம் செய்துகொண்டார் என்று இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தார் வழக்கறிஞரும், சமூக செயற்பாட்டாளருமான இந்திரா ஜெய்சிங்.
இதை அடுத்து இன்று (செப்.17) ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் நடந்த அரசு விழாவில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கிய பிரதமர் மோடி, தலைமை நீதிபதி இல்லத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் தாம் கலந்துகொண்டது குறித்துப் பேசினார். அவர் பேசியவை பின்வருமாறு:
`விநாயகர் சதுர்த்தி நம் நாட்டின் நம்பிக்கை குறித்த விழா மட்டும் அல்ல, அது சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியது. இந்தியாவில் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்ட பிரிட்டிஷாருக்கு விநாயகர் சதுர்த்தி விழா பிடிக்காமல் போனது.
இதே போல சமூகத்தைப் பிரித்தாளும் வேலையில் ஈடுபட்டுவரும் அதிகாரத்துக்கு ஆசைப்படும் மக்களுக்கும் விநாயகர் சதுர்த்தி விழா குறித்தப் பிரச்னைகள் உள்ளன. விநாயகர் சதுர்த்தி விழாவில் தாம் பங்கேற்றது காங்கிரஸையும், அதைச் சார்ந்தவர்களையும் ஆத்திரப்படுத்தியுள்ளதை நீங்கள் பார்த்திருக்கலாம்’ என்றார்.