காங்கிரஸ், மதிமுக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்படம்: https://twitter.com/INCTamilNadu

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அவை எந்தெந்த தொகுதிகள் என்பது தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து திமுக, காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு கடந்த 9-ல் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் என்ன என்பது இன்று இறுதியானது. திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய மக்களவைத் தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்புடைய ஒப்பந்தத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளார்கள்.

மதிமுக போட்டியிடும் தொகுதியும் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அந்தக் கட்சிக்கு திருச்சி மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு ஈரோடு ஒதுக்கப்பட்டது.

இதன்மூலம், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முழுவதுமாக நிறைவடைந்துவிட்டது.

திமுக கூட்டணி:

திமுக - 21 தொகுதிகள்

காங்கிரஸ் - 10 தொகுதிகள் (திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2 தொகுதிகள் (மதுரை, திண்டுக்கல்)

இந்திய கம்யூனிஸ்ட் - 2 தொகுதிகள் (திருப்பூர், நாகப்பட்டினம்)

விடுதலைச் சிறுத்தைகள் - 2 தொகுதிகள் (சிதம்பரம், விழுப்புரம்)

மதிமுக - 1 தொகுதி (திருச்சி)

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1 தொகுதி (ராமநாதபுரம்)

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 1 தொகுதி (நாமக்கல்)

இதுதவிர, இந்தக் கூட்டணியில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இடம்பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவளிக்கும் வகையிலும், 2025 மாநிலங்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஓர் இடம் ஒதுக்கும் வகையிலும் திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in