
தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண்கள் பெறும் வட மாநில மாணவர்களுக்கு உதவித்தொகை, பரிசு போன்றவற்றை வழங்கி ஊக்குவிக்குமாறு தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 2024 நவம்பர் 26-ல், பள்ளிக்கல்வித் துறையில் இருந்து பள்ளிக்கல்வி இயக்குநருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில்,
`தமிழகத்தில் வாழும் வட மாநிலத்தவர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து தமிழ் மொழியைப் படிக்க வைப்பதாகவும், மாணவர்கள் விரும்பி படித்து தமிழக மொழியில் நன்கு புலமை பெற்றுள்ளதாகவும், இதனால் வடமாநிலத்தவர்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழ்மொழியை பயிற்றுவிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு’ தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சுற்றிக்கை வெளியிட்டுள்ளார் தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர்.
அதில், வட மாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும் எனவும், அவ்வாறு சேர்ந்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை, பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்த வேண்டும் எனவும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.