5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டாய தேர்ச்சி முறை தொடர வேண்டும்: ராமதாஸ்

கல்வித்தரத்தை மேம்படுத்துதல் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை பறித்து விடும்.
5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டாய தேர்ச்சி முறை தொடர வேண்டும்: ராமதாஸ்
1 min read

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெறுமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசுப் பள்ளிகளில் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்வதாக மத்திய கல்வி அமைச்சகம் நேற்று (டிச.24) அறிவித்தது. இந்நிலையில், இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,

`மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கல்வித்தரத்தை மேம்படுத்துதல் என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை பறித்து விடும். இது மிகவும் தவறான முடிவு.

மத்திய அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள் அனைவரும் நகர்ப்புற பணக்கார வீட்டு பிள்ளைகள் அல்ல. அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுகிறார்கள். 5 அல்லது 8-ம் வகுப்பில் அவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படாவிட்டால், அவர்கள் அத்துடன் படிப்பை நிறுத்தி விடுவார்கள்.

அப்படி ஒரு நிலை உருவாகக் கூடாது என்பதற்காகத்தான் எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற தத்துவம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு 2020-ம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அப்போதைய தமிழக அரசு அறிவித்தது. அதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாமக சார்பில் அறப்போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய அன்றைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

கிராமப்புற ஏழை மாணவர்கள் முழுமையான கல்வி சுதந்திரம் பெறும் வரை, 8-ம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி முறை நடைமுறை தொடர வேண்டும். எனவே, மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி வழங்கும் முறையை தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in