தொப்புள்கொடியை வெட்டி வீடியோ வெளியிட்டது தொடர்பாக யூடியூபர் இர்ஃபான் மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், இர்ஃபானை அறுவைச் சிகிச்சை அறைக்குள் அனுமதித்த மருத்துவர் நிவேதிதா பயிற்சியைத் தொடர தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கு கடந்த ஜூலை 24 அன்று குழந்தை பிறந்தது. தனது அன்றாட வாழ்க்கையை யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வரும் இர்ஃபான் குழந்தை பிறந்தது தொடர்பாகவும் யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோவில் அறுவைச் சிகிச்சை அறையில் மனைவி இருப்பதையும் குழந்தை பிறப்பதையும் தொப்புள்கொடியை வெட்டுவதையும் இர்ஃபான் படம்பிடித்து வெளியிட்டார். இந்த வீடியோ சர்ச்சையானதைத் தொடர்ந்து, யூடியூப் பக்கத்திலிருந்து இர்ஃபான் அதை நீக்கினார்.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் இர்ஃபான் மற்றும் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
"கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை வெளியில் தெரிவிக்கக் கூடாது என்பது விதி. ஆனால், யூடியூபர் இர்ஃபான் இந்தச் சட்டத்தை மீறி கடந்த மே மாதம் துபாயில் பரிசோதனை செய்து குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்துள்ளார். துபாயில் இதுபோன்ற சட்டங்கள் எதுவும் இல்லை. எனவே, அங்கு சென்று குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்துள்ளார்.
பிறகு, இந்தியா வந்து தனக்குப் பெண் குழந்தை பிறக்கப்போவதாக இர்ஃபான் கொண்டாட்டங்களில் ஈடுபட்டார். தகவல் தெரிந்தவுடன் டிஎம்எஸ் சார்பில் நடவடிக்கை எடுக்க அவருக்கு நோட்டீஸ் கொடுத்தோம். இனி இதுபோன்று செய்யமாட்டேன் என மன்னிப்புக் கேட்டு வருத்தம் தெரிவித்தார்.
இந்த நிலையில்தான் அவருடையக் குழந்தைக்கு அவர் தொப்புள்கொடியை அறுத்து எடுத்திருக்கிறார். இது பெரியளவில் கண்டிக்கக்கூடிய ஒரு விஷயம்.
ஒரு மருத்துவமனையில் அறுவை அரங்குக்குள் மருத்துவர் அல்லாத ஒருவர் சென்று தொப்புள்கொடியைத் துண்டித்திருப்பது என்பது, தேசிய மருத்துவச் சட்டத்தின்படி விதிமீறல்.
எனவே தான் மருத்துவச் சட்ட விதிகளை மீறிய அந்த நபர் (இர்ஃபான்) மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் கொடுத்துள்ளோம். மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்க செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் டிஎம்எஸ் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
இர்ஃபான் மீது மட்டுமில்லாமல், ரெயின்போ மருத்துவமனைக்குள் அவரை அனுமதித்த பெண் மருத்துவர் நிவேதிதா மீதும் நடவடிக்கை எடுக்குமாறு செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த மருத்துவர் பயிற்சியைத் தொடர தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் சட்டரீதியாகவும் துறைரீதியாகவும் நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
குழந்தையின் பாலினத்தை அறிவதைப் பொறுத்தவரை துபாய் சென்றுதான் பரிசோதனை செய்திருக்கிறார். தமிழ்நாட்டில் பரிசோதனை செய்திருந்தால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். துபாயில் பரிசோதனை எடுக்கப்பட்டு வெளியிட்டதால், இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு மன்னிப்பு கோரி வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டார்கள். காரணம், காவல் துறையிடம் நடவடிக்கை எடுக்கச் சொல்லி துறை சார்பாகவே கடிதம் கொடுத்துள்ளோம்" என்றார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.