

வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகப் போராடிய நல்லகண்ணு தற்போது தனக்குத் தானே போராடிக் கொண்டிருக்கிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு , கடந்த சில மாதங்களாகவே வயது முதிர்வு காரணமாக உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறார். 101 வயதாகும் அவர் தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
வீட்டில் தவறி விழுந்து விபத்து
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22 அன்று எதிர்பாராத விதமாக வீட்டில் தவறி விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் பாதிப்பும் உண்டானதால், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்த அவர் வீடு திரும்பினார். ஆனால் அதன்பின் அவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டு வந்தது.
திடீர் மூச்சுத் திணறல்
இதற்கிடையில் கடந்த பிப்ரவரி 1 அன்று அவருக்குத் திடீரென தீவிரமான மூச்சுத்திணறல் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உயர்தர சிக்க்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சையில் உள்ள அவரை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
மோசமான சுவாசப் பிரச்னை
இதனிடையே நேற்று (பிப். 24) அவரது சுவாசப் பிரச்னை மோசமடைந்தது. இதையடுத்து அவரை வென்டிலேட்டருக்கு மாற்றிய மருத்துவர்கள், தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த 25 நாள்களாக அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில் தற்போது அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நேற்று அவர் மறைந்ததாகவும் வதந்திகள் பரப்பபட்டன.
தனக்குத் தானே போராடுகிறார்
இந்நிலையில், இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் அவரை மருத்துவமனையில் சென்று நலம் விசாரித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
“அவர் குணமடைந்து திரும்ப வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள், அவரது உடல்நலனில் அக்கறை கொண்டு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகப் போராடியவர், இப்போது தனக்காகத் தானே போராடிக் கொண்டிருப்பதை கடந்த சில நாள்களாக நாம் பார்த்து வருகிறோம். மருத்துவர்கள் மிகுந்த அக்கறையுடன் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். எனவே அவர் விரைவில் குணமடைந்து திரும்புவது நம் அனைவரின் எதிர்பார்ப்பாகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் அனைவரும் இங்கே கூடியிருக்கிறார்கள். ஆகவே, மக்களுக்காக உழைத்தவர் அவர் என்பதனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் அவரது நலனில் அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
Communist Party of India-Marxist State Secretary Shanmugam said that Nallakannu, who fought for the people throughout his life, is now fighting for himself.