பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவது, யாரைப் பேச அழைப்பது என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க விரைவில் குழு ஒன்று அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகர், சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் சர்ச்சைக்குரிய வகையில் அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளைத் தெரிவித்து, மாற்றுத்திறனாளி ஆசிரியரை மரியாதை குறைவாக நடத்தியது தொடர்பாக பரம்பொருள் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு இன்று கைது செய்யப்பட்டார். சைதாப்பேட்டை காவல் துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.
இதுதொடர்பாக தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஸ் கூறியதாவது:
"ஒரு பிரச்னை என்றால், உடனடியாக அதை எதிர்கொள்ள வேண்டும். இதற்குத் தீர்வு காண என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை எடுக்க வேண்டும். மகாவிஷ்ணு விவகாரம் தற்போது காவல் துறை வசம் உள்ளது. அவர்கள் அதைப் பார்த்துக்கொள்வார்கள். தங்களை அவமானப்படுத்தியிருப்பதாக மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இனி காவல் துறையும் புகாரளித்தவர்களும் சேர்ந்து முடிவு செய்துகொள்வார்கள். இவர் மீது தவறு இருக்கிறதா, இல்லையா என்பதை சட்டம் முடிவு செய்து கடமையைச் செய்யும்.
அங்கும் இங்கும் இதுபோன்ற பிரச்னை அவ்வப்போது எழும்போது, இதற்கென்று பிரத்யேகமாக வழிகாட்டு நெறிமுறைகளை வரையறுக்க வேண்டும் என்று முதல்வர் கூறினார். மூட நம்பிக்கைகளைத் தூண்டும்விதமாகச் சொல்வதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓர் அறிவுசார்ந்த சமமுதாயத்தை உருவாக்க வேண்டியது நம் கடமை. ஒவ்வொரு குடிமகனும் அறிவுசார்ந்து சிந்திக்க வேண்டும்.
பள்ளிகளில் இனி இதுமாதிரியான நிகழ்ச்சிகள் நடைபெறும்போது யார் யார் பேச வேணடும், எந்த மாதிரியான நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வரையறுக்கவுள்ளோம். மிக விரைவில் இதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்படும்" என்றார் அன்பில் மகேஸ்.