
மாநில சுயாட்சியை உறுதிசெய்ய, மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் குறித்து விரிவாக ஆராயந்து பரிந்துரைகளை வழங்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்.15) கூறியதாவது,
`மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழலில் கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், மத்திய-மாநில அரசுகளின் உறவுகளை அதற்குரிய கொள்கைகளை மேம்படுத்திடவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விதி கூறுகள், நடைமுறையில் உள்ள சட்டங்கள், ஆணைகள் ஆகியவற்றை அனைத்து நிலைகளிலும் ஆராய்ந்து, மறு மதிப்பீடு செய்திடவும் மற்றும் அதற்குரிய நடவடிக்கைகளை அரசுக்குப் பரிந்துரை செய்திடவும் உயர்மட்ட அளவிலான குழு ஒன்றை அமைப்பது மிக மிக அவசியமானதாக இருக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப்பை தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்படும்.
இதன் உறுப்பினர்களாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அஷோக் வர்தன் ஷெட்டியும், திட்டக்குழு முன்னாள் துணைத்தலைவர் நாகநாதனும் இருப்பார்கள்.
இந்த உயர்நிலைக்குழு இடைக்கால அறிக்கை 2026 ஜனவரி இறுதிக்குள்ளும், இறுதி அறிக்கையை 2 ஆண்டுகளிலும் அரசுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திட உயர்மட்டக்குழு அமைத்திடுவது தமிழ்நாட்டின் நலன்களுக்காக மட்டுமல்ல, வேற்றுமையில் ஒற்றுமை என்னும் அடிப்படையில், பரந்து விரிந்த இந்தியத் திருநாட்டின் அனைத்து மாநில உரிமைகளைக் காத்திடவே நாம் இன்று இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளோம்’ என்றார்.