மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகளைக் கண்காணிக்க, அரசு நலத் திட்டங்கள், முதன்மைக் கல்வி அலுவலகத்தை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முறைகேடாக மாணவர்கள் எண்ணிக்கையைப் பதிவு செய்து, அரசு நலத்திட்ட உதவிகளின் பலன்களைப் பெற்றதாக சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து, அரசு சார்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின்படி, அரசு அமைத்துள்ள குழுவில் பள்ளிக்கல்வித் துறையிலுள்ள ஐஏஎஸ் நிலையில் உள்ள அதிகாரிகள் மற்றும் இயக்குநர்கள் மாவட்ட வாரியாகக் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.